Last Updated : 01 Mar, 2015 11:56 AM

 

Published : 01 Mar 2015 11:56 AM
Last Updated : 01 Mar 2015 11:56 AM

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க திட்டம் சார்ந்த செலவுகளை குறைத்தார் ஜேட்லி

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் திட்டம் சார்ந்த செலவுகளை சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு குறைத்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

நேற்று பட்ஜெட் தாக்கலின் போது 2014-15-ம் ஆண்டுக்கான திட்டம் சார்ந்த செலவுகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. அப்போது கடந்த நிதி ஆண்டுக்கான திட்டம் சார்ந்த செலவுக்காக ஒதுக்கப்பட்டிருந்து ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் கோடி மறுமதிப்பீட்டின்போது ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 934 ஆக குறைக்கப்பட்டது.

2015-16-ம் நிதியாண்டுக்கான திட்டம் சார்ந்த செலவுக்காக ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 277 கோடியும், திட்டம் சாராத செலவாக ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டுக்கான மறுமதிப்பீட்டுக்கு தொகைக்கு நிகராகவே உள்ளது. 2015-16-ம் நிதியாண்டில் மொத்த செலவு ரூ.17 லட்சத்து 77 ஆயிரத்து 477 கோடி. இதில் ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு உட்பட அத்தியாவசியமான செலவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் கூறப்பட் டுள்ளபடி நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீதமாக அல்லது ரூ.5 லட்சத்து 12 ஆயிரத்து 628 கோடியாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த வரி வருவாய் ரூ14 லட்சத்து 49 ஆயிரத்து 490 கோடியாக இருக்கும். இதில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகை ரூ. 5 லட்சத்து 23 ஆயிரத்து 958 கோடியாக இருக்கும்.

வரி அல்லாத வருவாய் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 733 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

60 முறை முதலீடு.. 27 முறை வளர்ச்சி..

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘முதலீடு’ ('Investment') என்ற வார்த்தையை சுமார் 60 முறை பயன்படுத்தினார். அதேபோல் மோடி அரசின் தாரக மந்திரமான ‘வளர்ச்சி’ (growth) என்ற வார்த்தையை சுமார் 27 முறையாவது பயன்படுத்தியிருப்பார்.

ஜூலை 2014-ல் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் ‘முதலீடு’ என்ற வார்த்தையை சுமார் 34 முறை பயன்படுத்தியிருந்தார்.

அதேபோல் உரையில் இடையிடையே ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ அதாவது 'வர்த்தகம் செய்ய சுலபம்' என்ற சொற்றொடரையும் அவர் அடிக்கடி பயன்படுத்தினார். குறைந்தது 10 இடங்களிலாவது இதனை அவர் பயன்படுத்தியிருப்பார். ஆனால் இன்றைய இணைய உலகில் கூறப்படும் திறவுச் சொல்லாக முதலீடு என்ற சொல்லே ஜேட்லியின் உரையில் ஆதிக்கம் செலுத்தியது.

தவிர, ‘வளர்ச்சி’, ‘உள்கட்டமைப்பு’, ‘அந்நிய முதலீடுகள்' போன்ற வார்த்தைகளும் இவரது நேற்றைய உரையில் மீண்டும் மீண்டும் வந்தவண்ணம் இருந்தன.

முதலீடு என்ற வார்த்தையை 60 முறை ஜேட்லி பயன்படுத்தினாலும் கடந்த பட்ஜெட்டில் 34 முறை பயன்படுத்திய ‘வளர்ச்சி’ என்ற வார்த்தை இம்முறை 27 முறையாக பின்னடைவு கண்டது. இதற்கு முன்னதாக, ப.சிதம்பரம் பிப்ரவரி 2014-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது 'வளர்ச்சி' என்ற வார்த்தையை 32 முறை பயன்படுத்தினார். ஆனால் ‘முதலீடு’ அவரால் 11 முறையே பயன்படுத்தப்பட்டது.

வேலைகள், திறமைகள், இளையோர், கார்ப்பரேட், ஏழை போன்ற வார்த்தைகள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டன. ஆனால் ‘நெருக்கடி’ (Crisis) என்ற வார்த்தை இம்முறை ஜேட்லியின் உரையில் இடம்பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x