

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 12-வது முதல்வராக முப்தி முகமது சையது (79) நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அங்கு 49 நாள் ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்த மாநில ஆட்சியில் பாஜக இடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த டிசம்பரில் நடைபெற்றது. 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைப் பெற்றன.
பெரும்பான்மை பலம் இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்க முடிவு செய்தன.
எனினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு, ஆயுதப் படை சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்தன. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக இரு கட்சிகளுக்கும் இடையே அண்மையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி
இதைத் தொடர்ந்து ஜம்மு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் காஷ்மீரின் புதிய முதல்வராக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் என்.என்.வோரா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து முதல்வர் சையது உட்பட 13 எம்எல்ஏக்களும் பாஜக தரப்பில் 12 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
மோடி நேரில் வாழ்த்து
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சையது தலைமையிலான அமைச்சர்கள் குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். முதல்வர் சையதுவை ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தலைவர் அமித் ஷா, பொதுச்செயலர் ராம் மாதவ் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பாஜக இப்போதுதான் முதல்முறையாக ஆட்சியில் இடம்பெறுகிறது. புதிய கூட்டணி அரசு பதவியேற்றிருப்பதன் மூலம் 49 நாள் ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
செயல்திட்டம் வெளியீடு
பதவியேற்பு விழாவுக்குப் பிறகு சையதும் நிர்மல் சிங்கும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது 16 பக்கம் கொண்ட கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை அவர்கள் வெளி யிட்டனர்.
370-வது சட்டப்பிரிவு உள்ளிட்ட விவகாரங்களில் இப்போதைய நிலையே தொடரும் என்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அகதிகளின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் செயல்திட்டத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை முப்தி முகமது சையது முதல்வராக பதவி வகித்துள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
‘மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்’
காஷ்மீர் மாநில மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப் பதாவது:
பாஜக-மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அரசு காஷ்மீர் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இனிமேல் காஷ்மீர் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற முப்தி முகமது சையது நிருபர்களிடம் கூறிய தாவது: நிர்ப்பந்தம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. மக்களின் எதிர்காலம் கருதியே இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.
காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்து வதை தவிர வேறு சிறந்த வழி இல்லை. அந்த நாட்டுடன் பேச்சு நடத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத் செயலரை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டில் மாநிலத்தில் நல்லாட்சி வழங்கினேன். இந்த முறை அதைவிட சிறப்பாக ஆட்சி நடத்துவேன். ஊழலை ஒழிக்க எனது அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும். வேலைவாய்ப்புகள் பெருக்கப்படும். மாநிலத்தில் 100 சதவீத எழுத்தறிவை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்