மோடி பதவியேற்பு: ‘சார்க்’ தலைவர்கள் பங்கேற்பு - புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்கிறார் நவாஸ் ஷெரீப்

மோடி பதவியேற்பு: ‘சார்க்’ தலைவர்கள் பங்கேற்பு - புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்கிறார் நவாஸ் ஷெரீப்
Updated on
1 min read

பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சி யில் சார்க் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பூடான் பிரதமர் லியோன்சென் ஷெரீங் டோப்கே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சார்பில் நாடாளுமன்றத் தலைவர் ஷிரின் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இப்போதுதான், இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மொரீஷியஸ் பிரதமர் வருகை

சார்க் நாடுகளின் தலைவர்களைத் தவிர, மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் உள்ளிட்ட தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகார ஆலோசகர் சர்தாஜ் அஸிஸ், சிறப்பு உதவியாளர் தாரிக் பதேமி, வெளியுறவு அமைச்சகச் செயலாளர் அய்ஸாஸ் சவுத்ரி உள்ளிட்ட குழுவினர் வந்துள் ளனர்.

பிரதமர் மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசவுள்ளனர். முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறும்போது, “இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. முந்தைய பாஜக கூட்டணி அரசில் பிரதமராக இருந்த வாஜ்பாய் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த வாஜ்பாயும், நானும் எடுத்த முயற்சிகள் 1999-ம் ஆண்டுடன் நின்று போனது. இப்போது அந்த முயற்சியை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒரேவிதமான கலாச்சாரம், பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன.

இந்த ஒற்றுமையை நமது வலிமை யாக ஏன் மாற்றக்கூடாது? மோடியை சந்தித்து உரையாட ஆர்வமாக உள்ளேன். அதன் மூலம் இருதரப் புக்கும் இடையே இருக்கும் அவநம் பிக்கைகள், தவறான புரிதல்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in