

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் 13 அம்சங்கள் பற்றி விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருகிறார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
"13 அம்சங்களைச் சேர்த்ததன் பெருமையை தனதாக்கிக் கொள்கிறார் மோடி. ஆனால் அது ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தும் சட்டம், 2013-லேயே இருந்ததே. அந்தச் சட்டத்தில் இருந்த கட்டாயப் பிரிவாகும் இது" என்று ஜெய்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
மோடி விவசாயிகளுக்கு எதிரான பிரதமர். 5-6 தொழிலதிபர்களுக்கு சகாயம் செய்ய நிலச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருகின்றனர். இந்த 5-6 தொழிலதிபர்கள் பாஜக-வுக்கு தேர்தல் தருணத்தில் நிதி அளித்தனர்.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அவர்கள் நிறைவேற்றினர். ஆனால் மாநிலங்களவையில் முடியவில்லை. இதற்காக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளனர். சுமார் 14 கட்சிகள் இந்த திருத்தங்களை எதிர்க்கின்றனர்.
பாஜக-வின் சில எம்.பி.க்களே என்னைச் சந்தித்து எதிர்ப்பை தொடருமாறு வலியுறுத்தினர். கோவிந்தாச்சார்யா மற்றும் சிவசேனா இந்த திருத்தங்களை எதிர்த்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்.-ஐ பொறுத்தவரை இப்போதைக்கு மோடி அரசுடன் தற்காலிக ‘போர் நிறுத்தம்’ ஏற்பட்டுள்ளது" என்றார் ஜெய்ராம்.
உடனிருந்த ராஜஸ்தான் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் பைலட் கூறும்போது, “ராஜஸ்தான் தொழிற்துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டு நிறுவனம் மாநிலத்தில் 72,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. ஆனால் இதில் 54,000 ஏக்கர்கள்தான் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 12,000 ஏக்கர்களில் மட்டும்தான் தொழிற்கூடங்கள் உள்ளன.
இது போதாதென்று விவசாயிகள் நிலங்களையும் அபகரிக்க மாநில அரசு விரும்புகிறது” என்றார்.