Last Updated : 11 Mar, 2015 11:03 AM

 

Published : 11 Mar 2015 11:03 AM
Last Updated : 11 Mar 2015 11:03 AM

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மன்மோகன் சிங் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் ஏப்ரல் 8-ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பி.சி.பராக், ஹிண்டில்கோ நிறுவனம், அதன் அதிகாரிகள் ஷுபேண்ந்து அமிதாப் மற்றும் டி.பட்டாச்சார்யா ஆகியோரும் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் அடங்குவர்.

ஒடிஸா மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ளது தலபிரா கிராமம். இங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு அந்தக் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். காடுகள், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று குரல் எழுப்பினர். எனினும், சுரங்கத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

வழக்கு விசாரணையின் போது, மன்மோகன் சிங், பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மன்மோகன் சிங், சிங்கின் அப்போதைய முதன்மைச் செயலர் டிகேஏ நாயர், அப்போதைய தனிச் செயலாளர் பி.வி.ஆர் .சுப்பிரமணியம் உட்பட வழக்கில் தொடர்புடைய சிலரின் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்து மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், மன்மோகன் சிங், குமாரமங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ நிறுவனம், இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஷுப்ஹெண்டு அமிதாப், டி. பட்டாச்சார்யா, முன்னாள் செயலர் பி.சி.பராக் ஆகியோருக்குச் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இவர்கள் 6 பேரும் ஏப்ரல் 8-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி பரத் பராஷார், தனது 73 பக்க உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கும்படி, அப்போதைய செயலர் பராக் பரிந்துரைத்துள்ளார். ஆனால், பிரதமர் அலுவலக அதிகாரிகள் கே.வி.பிரதாப், ஜாவீத் உஸ்மானி ஆகியோர் ஆட்சேபனைத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே, ஹிண்டால்கோவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று குறிப்பு எழுதி உள்ளனர். அதை கருத்தில் கொள்ளாமல், மன்மோகன் சிங் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இந்த வழக்கில் ஹிண்டால்கோ நிறுவனம், குமாரமங்கலம் பிர்லா, ஷுப்ஹெண்டு, பட்டாச்சார்யா ஆகியோர் முதல்கட்ட குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளதற்கான முகாந்திரம் இருப்பது தெரிகிறது. அதன்பின், நால்வரும் அப்போதைய அரசு செயலர் பராக்கையும், அப்போது நிலக்கரித் துறை அமைச்சர் பொறுப்பையும் வைத்திருந்த மன்மோகன் சிங்கையும் இந்த சதியில் இழுத்துள்ளனர். பராக் மற்றும் மன்மோகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டுள்ளது தெரிகிறது. எனினும், கடைசியில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏப்ரல் 8-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பரத் பராஷார் உத்தரவிட்டுள்ளார்.

ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்தது ஹிண்டால்கோ நிறுவனம். இந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. சம்மன் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை ஆராய்ந்து வருகிறோம். சட்டப்படி எந்தப் பிரச்சினையையும் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் முன்னாள் செயலர் பராக் கூறும்போது, ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது’ என்றார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அனைவருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் வழி உள்ளது.

மன்மோகன் சிங் வருத்தம்

சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு மன்மோகன் சிங் கூறியதாவது:

இந்த உத்தரவை அறிந்து வருத்தம் அடைந்தேன். எனினும் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலையும் ஒரு அங்கம்தான். நேர்மையான விசாரணை நடக்கும்போது உண்மை வெளியில் வரும் என்று நம்புகிறேன். சட்டப்படி எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த உண்மைகள் அனைத்தையும் தெரிவிக்க எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ முன்னிலையில் நான் ஏற்கெனவே வாக்குமூலம் தந்திருக்கிறேன். பிரதமர் பதவி வகித்தபோதே, நான் எடுத்த நியாயமான நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டிருக்கிறேன். நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x