

ஆம் ஆத்மி தேசிய ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் பதவியிலிருந்து பிரசாந்த் பூஷண் நேற்று நீக்கப்பட்டார். மேலும் கட்சியில் லோக்பால் பதவி வகித்து வந்த அட்மிரல் எல். ராம்தாஸ் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் லோக்பால் பதவியிலிருந்து ராம்தாஸை நீக்கவும் புதிதாக லோக்பால் குழுவை அமைக்க வும் முடிவு செய்யப்பட்டது. புதிய குழுவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் என்.திலிப் குமார், ராகேஷ் சின்ஹா, கல்வியாளர் எஸ்.பி.வர்மா ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் பதவியில் இருந்து பிரசாந்த் பூஷண் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் வகேலா தலைமையில் மூவர் குழு அமைக்க முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை எதிர்த்து ஏப்ரல் 22ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி தீர்மானித்துள்ளது. அதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
மேலும் பிற மாநிலங்களில் இந்த போராட்டத்தை விரிவுபடுத்துவற்கு மூத்த தலைவரும் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் சஞ்சய் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்திய குடியரசுக் கட்சி அழைப்பு
ஆம் ஆத்மி நிறுவனர் தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது அநீதியானது என்று இந்திய குடியரசுக்கட்சி (அதாவலே) தலைவர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார். பூஷணும் யாதவும் எங்கள் கட்சியில் இணையலாம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.