கொள்கை முடிவு எடுக்க முடியாத நிலைக்கு சிவிசி, சிபிஐ, சிஏஜி காரணம் இல்லை: மத்திய கண்காணிப்பு ஆணையர் பேச்சு

கொள்கை முடிவு எடுக்க முடியாத நிலைக்கு சிவிசி, சிபிஐ, சிஏஜி காரணம் இல்லை: மத்திய கண்காணிப்பு ஆணையர் பேச்சு
Updated on
1 min read

நாட்டில் கொள்கை முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு காரணம் தலைமை கணக்கு தணிக்கை அமைப்போ சிபிஐ அமைப்போ லஞ்ச கண்காணிப்பு அமைப்போ காரணம் இல்லை என்றார் மத்திய தலைமை கண்காணிப்பு ஆணையர் ஜே.எம்.கார்க், நிறுவனங்களில் நடக்கும் மோசடி தொடர்பாக அசோசேம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உச்சி மாநாட்டில் கார்க் பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது கட்ட ஆட்சியில் கொள்கை முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட காரணம் இந்த 3 அமைப்புகள் தான் என்று குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது.

பல்லாயிரம் கோடி நிதி ஆதாரம் கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் சேர்வதற்காக பேராசை, நடத்தை நெறிகளை காற்றில் பறக்கவிடுவது, குறுக்கு வழியாக ஊழலை கையாள்வது போன்றவை நிறுவனங்கள் மத்தியில் காணப்படுகிறது. எனவே ஒழுங்கு முறை அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

தணிக்கை செய்வது, ஊழல் புகார் வெளியாகும்போது அது தொடர்பான அரசு முடிவுகளை புலனாய்வு செய்வது போன்ற வற்றில் சிஏஜி, சிபிஐ, சிவிசி ஆகிய அமைப்புகள் தலையிடு வதை பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் விரும்புவதில்லை. அப்படி செய்யும்போது அது கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என்பது அவர்களின் கருத்து.

கல்வி, விளையாட்டு, நிதித் துறைகள் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் நிறுவனங்கள் மோசடி செய்வது பெரிய அளவில் காணப்படுகிறது. ஒழுங்குமுறை அமைப்பை பலப் படுத்தினால் இந்த மோசடிகளை கட்டுப்படுத்தலாம்.

மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலைமை அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 6 டாலருக்கும் குறைவான பணத்தில் 80 கோடி இந்தியர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்த ஏற்றத் தாழ்வு நிலைக்கு அரசுதான் காரணம். இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் பதற்றம் அதிகரிக்கும்.

ஒழுங்குமுறை அமைப்பு இல்லாததே காரணம்

நிறுவனங்களில் மோசடி அதிகரிப்பதற்கு ஒழுங்கு முறை அமைப்பு இல்லாததே காரணம் என்றார் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா.

2103-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 29910 கோடி மதிப்புக்கு 1.69 லட்சம் மோசடி நடந்துள்ளதாக வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன என்றார் சின்ஹா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in