

நாட்டு மக்களுக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் சைக்கிளுக்காக தனிப் பாதையை அவர் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது பொது பட்ஜெட் குறித்து அவர் கூறியதாவது:
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நல்ல காலத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் நல்ல காலத்துக்காக ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்த சாமானிய மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. பட்ஜெட்டில் உத்தரப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்துக்கு போதிய சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து கட்சிகளின் எம்பிக்களுக்கும் கடிதம் எழுதினேன். தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இனிமேலாவது மாநில பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
உத்தரப் பிரதேச பொதுப் போக்குவரத்தில் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி லக்னோ, ஆக்ராவில் சைக்கிளில் செல்வோருக்கு என தனிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.