

ஜம்மு காஷ்மீர் மாநில அரசு பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த மேலும் 800 பேரை சிறையிலிருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளி யானது தொடர்பாக விளக்க மளிக்கக் கோரி மாநிலங்களவை யில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
காஷ்மீர் அரசு மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் 800 பிரிவினைவாதிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோன்ற அறிக்கையை மாநில ஆளுநர் அனுப்பி உள்ளாரா என்றும், மஸ்ரத் ஆலமை விடுவிப்பதற்கான ஆணையில் அவர் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கமான அலுவல்களை நிறுத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க அனுமதிக்கக் கோரி 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளேன்.
சிறையில் உள்ள பிரிவினை வாதிகளை காஷ்மீர் அரசு இனி விடுவிக்காது என்று மத்திய அரசு உத்தரவாதம் தர முடியுமா என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா கூறும்போது, “ஆலமை விடுவிப்பதற்கான உத்தரவில் ஆளுநர் கையெழுத் திட்டுள்ளாரா, இந்த உத்தரவு ஆளுநர் ஆட்சியின்போது பிறப்பிக் கப்பட்டதா என்பதை தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, மத்திய நிதிய மைச்சர் அருண் ஜேட்லி கூறும் போது, “ஆலம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக மாநில அரசு அனுப்பியுள்ள அறிக்கை திருப்தி யளிக்கவில்லை என்பதால் கூடுதல் விவரங்களை கேட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கெனவே தெளிவாகக் கூறியுள்ளார்.
மேலும் 800 பிரிவினைவாதி களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஆதாரத்தை சமர்ப்பித்தால் அது குறித்து பதில் அளிக்க அரசு தயாராக இருக்கிறது. ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் அடிப் படையில் அதுகுறித்து விவாதிக்க அனுமதி கோரி நோட்டீஸ் வழங்க முடியாது” என்றார்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே (நேற்று முன் தினம்) விவாதிக்கப்பட்டு விட்ட தால் மீண்டும் இந்தப் பிரச்சினையை விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார். எனினும், சமாஜ்வாதி கட்சி உறுப்பினரிடம் இதுதொடர்பாக புதிய தகவல் இருந்தால் வேறு விதியின் கீழ் நோட்டீஸ் கொடுக்கலாம் என்றார்.
இந்த விவகாரத்தால் பூஜ்ஜிய நேரத்தின் பாதி நேரம் வீணானது. பின்னர் வழக்கமான அலுவல்கள் தொடர்ந்து நடை பெற்றன.