

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் ரூ. 1.20 லட்சம் கோடி செலவில் உருவாக உள்ளது. குண்டூர் மாவட்டம் தூளூரு பகுதியில் சர்வதேச தரத்தில் உருவாக உள்ள இந்த தலைநகரில், ஜப்பானைச் சேர்ந்த 250 நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
சந்திரபாபு தீவிரம்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் உருவான பின்னர், கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய இரு பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்கள் இணைந்து புதிய ஆந்திர மாநிலம் கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி உருவானது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகரமாக ஹைதராபாத் 10 ஆண்டுகள் வரை செயல்படும். எனினும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய தலைநகரை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டுவதால், வரும் ஏப்ரல் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
நகரமாகும் கிராமங்கள்
மாநிலத்தின் மையப்பகுதியில் புதிய தலைநகர் அமைய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதால், கிருஷ்ணா நதிக்கரையின் இரு பகுதியிலும் அழகிய தலைநகரம் அமைய உள்ளது. இதற்காக குண்டூர் மாவட்டத்தில் உள்ள தூளூரு, மங்கலகிரி, தாடேபல்லி கூடம் ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 29 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தலைநகருக்காக இப்போது நிலங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநில நகர வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா தெரிவித்துள்ளார். இன்றுடன் நிலம் சேகரிப்பு முடிவடைய உள்ளதால், நேற்று விவசாயிகள் தானாக முன்வந்து மேலும் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அரசுக்கு வழங்கினர். இவை தவிர அரசு நிலங்கள் 15 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இதன் காரணமாக முதற்கட்டமாக 50 ஆயிரம் ஏக்கரில் புதிய தலைநகரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வரும் ஏப்ரல் மாதம் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
விவசாயிகளுக்கு நஷ்டஈடு
தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தனியாக நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டஈடு வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இது தவிர மல்லி, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் பூந்தோட்டம் அமைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க உள்ளது. மேலும் விவசாய வங்கி கடன் ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி செய்யவும் அரசு உத்தரவாதம் வழங்கி உள்ளது.
மாநிலப் பிரிவினை சட்டத்தின்படி, தலைநகர் அமைக்க மத்திய அரசு நிதி உதவி வழங்க உள்ளது. சுமார் ரூ.3 லட்சம் கோடி வரை செலவாகும் சார்பில் மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. பின்னர் இது ரூ. 1.2 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஒப்பந்தம்
மொத்தம் 1,010 ஏக்கர் பரப்பில் புதிய தலைநகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சிங்கப்பூரில் உள்ள 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தலைமைச் செயலகம், சட்டப் பேரவை,
ராஜ்பவன், முக்கிய அரசு கட்டிடங்கள், முதல்வரின் இல்லம், அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் அமைய உள்ளன. முதல்வரின் அலுவலகம் மட்டும் 14 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. ராஜ்பவன் 15 ஏக்கரிலும், தலைமைச் செயலகம், சட்டப்பேரவை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளுக்கு 120 ஏக்கரும், உயர் நீதிமன்றத்துக்கு 60 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு துறை அலுவலக கட்டிடங்களும் நிறுவப்பட உள்ளன.
சிங்கப்பூர் நிறுவனங்கள் வரும் ஜூன் மாதத்தில் இதற்கான மாஸ்டர் பிளான் வழங்க உள்ளன.