

பிரபல காந்தியவாதியும் குஜராத் வித்யாபீட முன்னாள் துணைவேந்தருமான நாராயண் தேசாய், சூரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
90 வயதான நாராயண் தேசாய், மகாத்மா காந்தியின் உதவியாளரான மகாதேவ் தேசாயின் மகன் ஆவார். இவருக்கு ஒரு மகளும் 2 மகன்களும் உள்ளனர். குஜராத் மாநிலம் வல்சாத் என்ற இடத்தில் 1924-ம் ஆண்டு நராயண் தேசாய் பிறந்தார். அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் வளர்ந்தார். தந்தை மூலம் காந்திய கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டார்.
வினோபாவின் பூமிதான இயக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப் புரட்சி இயக்கம் ஆகியவற்றில் நாராயண் தேசாய் பங்கேற்றுள்ளார்.
காந்தியின் வாழ்க்கை வரலாற்றை கதை மூலம் விளக்கும் பணியை 2004-ல் தொடங்கினார். உலகம் முழுவதுமான இவரது நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. கடந்த 2007, ஜூலை முதல் குஜராத் வித்யாபீட துணைவேந்தராக பணியாற்றிய நாராயண் தேசாய் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்பதவியில் இருந்து விலகினார்.