Published : 17 Mar 2015 09:17 AM
Last Updated : 17 Mar 2015 09:17 AM

அதிவேக ரயில் பாதைக்கு ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.100 கோடி தேவை

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, துணைக் கேள்வி ஒன்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “அதிவேக ரயில்பாதை அமைப்பதற்கான செலவு, வழக்கமான ரயில் பாதைக்கு ஆகும் செலவை விட 10 முதல் 14 மடங்கு அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் அதிவேக ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

இந்திய ரயில்வே துறையிடம் தற்போது அதிவேக ரயில்பாதை ஏதுமில்லை. இந்நிலையில் புனே-மும்பை-அகமதாபாத், டெல்லி-ஆக்ரா-லக்னோ-வாரணாசி-பாட்னா, ஹவுரா-ஹால்டியா, சென்னை-பெங்களூரு-கோவை-எர்ணாகுளம்-திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்கள் சாத்தியக்கூறு ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியா - ஜப்பான் நிதி பங்களிப்புடன் திட்டமிடப் பட்டுள்ள, மும்பை -அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில்பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வு, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இதனை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

வைர நாற்கர ரயில்பாதை மற்றும் பிற அதிவேக ரயில்பாதை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கு கடந்த ரயில்வே பட்ஜெட்டில் ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போதைய பட்ஜெட்டில் இதற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில்பாதை சாத்தியக்கூறு ஆய்வுக்கு தற்போதைய பட்ஜெட்டில் ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

தற்போது டெல்லி-ஆக்ரா இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் 150 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. இதுவே நம் நாட்டில், ரயிலின் அதிகபட்ச வேகமாக உள்ளது. 2013-14-ம் ஆண்டில் இந்திய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மெயில்களின் சராசரி வேகம் ரூ.50.6 கி.மீ. ஆக உள்ளது.

அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “2014-15 நிதியாண்டில் பிப்ரவரி 2015 வரை நாடு முழுவதும் 80 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 123 பேர் உயிரிழந்துள்ளனர், 335 பேர் காயமடைந்துள்ளனர். 2013-14-ம் நிதியாண்டில் 71 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 54 பேர் இறந்துள்ளனர், 119 பேர் காயமடைந்துள்ளனர்.

2014-15-ல் 57 விபத்துகளுக்கு ரயில்வே ஊழியர்களே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 2013-14-ல் இந்த எண்ணிக்கை 50 ஆக இருந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x