

தெலங்கானா மாநிலம் உதயமாகும் நாளான ஜூன் 2-ம் தேதியே, முதல் முதல்வராக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் பதவி ஏற்க உள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து, தெலங்கானா மாநிலம் வரும் ஜூன் 2-ம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது. இதற்கான அனைத்து பணி களும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அரசு ஊழியர்கள் பிரிவினை, அரசு கட்டிடங்கள், மாநில எல்லை பணிகள், அரசு அலுவலகங்களில் மாநில பெயர், பெயர் பலகைகள் மாற்றம் என பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஜூன் மாதம் 1-ம் தேதி நள்ளிரவு 12 மணியிலிருந்து, நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உருவாக உள்ளது. இந்தத் தருணத்தைக் கொண்டாட இப்போதிலிருந்தே தெலங்கானா மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதன் தலைவர் கே.சந்திர சேகர் ராவ், மாநிலம் உதயமாகும் ஜூன் 2-ம் தேதி மதியம் 12.55 மணிக்கு பதவி ஏற்க உள்ளார் என அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் விளையாட்டு அரங்கம் அல்லது ராஜ் பவனில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிய வந்துள்ளது.