கர்நாடகத்தில் ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்: சட்டப்பேரவையில் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் - சிபிஐ விசாரணை கோரி போராட்டம் வலுக்கிறது

கர்நாடகத்தில் ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்: சட்டப்பேரவையில் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் - சிபிஐ விசாரணை கோரி போராட்டம் வலுக்கிறது
Updated on
2 min read

பெங்களூருவில் ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் டி.கே.ரவி (36) கடந்த திங்கள்கிழமை பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கர்நாடக சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கின. இதை ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, சிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன‌ர். சட்டப்பேரவை வளாகத்திலேயே இரவு முழுவதும் தங்கினர்.

நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவையின் மத்தியில் கூடி, “ரவியின் மரணத்துக்கு நீதி வேண்டும், சிபிஐ விசாரணை வேண்டும்” என கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசும்போது, “ரவியின் மரணத்தில் மர்மம் நிலவுகிறது. மத்திய உள்துறை இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நேர்மையான அதிகாரியின் மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு இருக்கிறது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பேசும்போது, “இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். சிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை மறைக்கப்படும் அபாயம் இருக்கிறது. முதல்வர் யாருக்கோ, எதற்கோ பயந்துக்கொண்டு அவசரமாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட் டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை எங்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடரும்” என்றார்.

அதற்கு முதல்வர் சித்தராமையா, “ரவியின் மரணத்தை அரசியலாக்கக் கூடாது. சிஐடி போலீஸாரின் விசாரணை மிக நேர்மையாக நடைபெறும். 15 நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக பேசலாம்” என்றார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 2-வது நாளாக கர்நாடக சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேபோல மாநிலத்தில் பல இடங்களில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ரவியின் மரணத்தைக் கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் போராட்டத்தில் குதித் துள்ளன. இதனால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ரவியின் பெற்றோர் கரியப்பா, கவுரம்மா, சகோதரர் ரமேஷ், மாமனார் ஹனுமந்த்ராயப்பா மற்றும் உறவினர்கள் பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் கூடி நேற்று போராட்டத்தில் ஈடுபட் டனர்.

ரவியின் பெற்றோரை சந்தித்த முதல்வர் சித்தராமையா, “ரவியின் மரணம் தொடர்பான உண்மையைக் கண்டுபிடிக்கும் வகையில் சிஐடி விசாரணை நடத்தப்படும்” என சமரசம் செய்தார். அதனை ஏற்க மறுத்த ரவியின் பெற்றோரை எதிர்க்கட்சித் தலைவர்கள் குமாரசாமி, ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா உள்ளிடோரும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in