Published : 18 Mar 2015 08:56 AM
Last Updated : 18 Mar 2015 08:56 AM

நாடாளுமன்ற துளிகள்: பூச்சிக்கொல்லிகளுக்கு தடை?

மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் எம்.பி.க்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் பதிலளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:

புது உறுப்பினர்கள் பதவியேற்பு

புதிதாக மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ் பப்பார், பாஜகவின் அமர் சங்கர் சப்லே, திரிணமூல் காங்கிரஸின் டோலா சென் ஆகிய மூவர் பொறுப்பேற்றுக் கொண்டனர். உத்தராகண்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ் பப்பார் இந்தி மொழியிலும், மகாராஷ்டிரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சப்லே மராத்தியிலும், மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டோலா சென் வங்கமொழியிலும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பெண்களின் பாதுகாப்பு இணையதளம்

உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:

பெண்களின் பாதுகாப்புக்காக mysecurity.gov.in என்ற இணையதளத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில், பாதுகாப்புக்கான செயலி (ஆப்) இணைய வசதிகளும் இணைக்கப்படும். தனி நபர், மாணவர், அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியோரால் உருவாக்கப்படும் பாதுகாப்புக்கான பிரத்யேக செயலிகளும் இதில் இணைக்கப்படும்.

தெலங்கானாவில் உயர் நீதிமன்றம்

சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா:

தெலங்கானாவில் விரைவில் தனியாக உயர் நீதிமன்றம் அமைக்கப்படும். இதுதொடர்பாக தெலங்கானா முதல்வரிடமிருந்து கடிதம் கேட்டுப் பெறுமாறு செயல்பாட்டுக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகளுக்கு தடை?

வேளாண்துறை இணையமைச்சர் சஞ்சீவ் பல்யான்:

எண்டோசல்பான் மீதான தடை நீடிக்கிறது. மற்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே காரணத்துக்காக நம் நாட்டிலும் சில வகை பூச்சிக் கொல்லிகளுக்குத் தடை விதிக்க முடியாது. அவை தடை செய்யப்பட வேண்டியவையா இல்லையா என்பது குறித்த அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது.

புலிகள் எண்ணிக்கை உயர்வு

தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

இந்தியாவில் தற்போது 2,226 புலிகள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பல்வேறு மோதல்களில் 22 வன விலங்கு வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2012-ம் ஆண்டு 89 புலிகள் இறந்துள்ளன. 2013-ல் 68 புலிகளும், 2014-ல் 78 புலிகளும் இறந்துள்ளன. நடப்பாண்டு இதுவரை 17 புலிகள் இறந்துள்ளன.

தயான் சந்துக்கு பாரத ரத்னா

திலீப் குமார், பிஜு ஜனதா தளம் எம்.பி.:

1928, 1932, 1936-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்லக் காரணமாக இருந்தவரும், 185 போட்டிகளில் 570 கோல்களை அடித்தவருமான ‘ஹாக்கி மந்திரவாதி’ மறைந்த தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்.

மலிவு விலை மருந்தகம்

சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா:

மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் அளிப்பதற்காக மத்திய அரசு தொடங்கிய ஜன் அவுஷதி திட்டமருந்துக் கடைகள் தற்போது 96 மட்டுமேஇயங்கி வருகின்றன. இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்சி பட்டியலில் சேர்க்க பரிந்துரை

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் விஜய் சாம்ப்லா:

பல்வேறு ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி 2014 முதல் மத்திய அரசுக்கு 16 பரிந்துரைகள் வந்துள்ளன. இவற்றில் 8 பரிந்துரைகள் மாநில அரசுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளன. கோரிக்கையை நியாயப்படுத்தி கூடுதல் விளக்கம் தருமாறு இந்த மாநிலங்களிடம் கேட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 8 பரிந்துரைகளில் 5 பரிந்துரைகள் இந்திய பதிவாளர் ஜெனரலுக்கும், 3 பரிந்துரைகள் அட்டவணை ஜாதியினருக்கான தேசிய ஆணையத்துக்கும் கருத்து கேட்டு அனுப்பப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x