

உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரி அருகே முடோஸி கிராமத்தை சேர்ந்தவர் ராதா(23). ஆணாக இருந்த இவரது இயற்பெயர் ஷியாம்வீர் சிங். 2012-ம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய இவர், ராதா என பெயர் சூட்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை தனது கணவர் என்றும் அவர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் ராதா கடந்த 21-ம் தேதி மெயின்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் பெண்ணாக மாறிய ராதாவின் புகாரை மகளிர் காவல் நிலையத்தில் விசாரிப்பதா அல்லது அவர் ஆணாக இருந்ததால் பொதுக் காவல் நிலையத்தில் விசாரிப்பதா என போலீஸார் திணறி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மெயின்புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் சிங் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த வழக்கை விசாரிப்பதில் சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது உண்மை தான். ராதாவாக மாறிய இவர், தற்போது மிசோரம் மாநிலத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரை தனது கணவராகக் குறிப்பிட்டு, அவர் மீது புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும்” என்றார்.
ராணுவ வீரரின் சகோதரர் கூறும்போது, “இளம் வயதில் இருவரும் நண்பர்களாக இருந்தனர். பெண்ணாக மாறிவிட்ட ஷியாம்வீர் கம்ப்யூட்டரால் ஜோடிக்கப்பட்ட சில படங்களை வைத்து எனது சகோதரனை மிரட்டி வந்தார். ஆனால் இருவருக்கும் மணமானதாக எனது சகோதரன் இதுவரை கூறியது இல்லை” என்றார்.
ராதா அளித்த புகாரின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 (தாக்கிக் காயப்படுத்துதல்), 498 (வரதட்சணை கொடுமை), 506 (அச்சுறுத்துவது) ஆகியவற்றின் கீழ் கிஷ்னி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.