Published : 28 Mar 2015 10:56 AM
Last Updated : 28 Mar 2015 10:56 AM
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு எழுத்தாளரின் நூல்கள் ஒரு வாசகரால் எரிக்கப்படும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்பட்டு, பலத்த வரவேற்பையும் கண்டனத்தையும் பெற்றது. அடுத்ததாக, சர்ச்சைக்குள்ளான ஒரு நாவலை இந்துத்துவ மற்றும் சாதிய அமைப்பினர் இணைந்து பொது இடத்தில் கொளுத்தினார்கள். இந்தச் செயல் பாடுகளைக் கண்டித்த பலரும் இதைப் பாசிசமாக அடையாளப்படுத்தினார்கள்.
நூல்களை, நூலகங்களை எரிப்பது பாசிசத்தின் வழிமுறையாக இருந்துவருகிறது. வரலாற்றில், வெற்றிகொண்ட படைகள் பல நூலகங்களை, ஆவணக் காப்பகங்களை அழித்துள்ளன. கி.பி. 391-ல் அலெக்ஸாண்ட்ரியா நூலகம் அழிக்கப்பட்டது நாமறிந்த பண்டைக் கால உதாரணம். நாகர்கோவிலில் பழமையான பூங்கா நூலகம் பெரும்பான்மைச் சாதி அரசியலுக்குப் பலியாகிச் சாம்பலானது. யாழ்ப்பாண நூலக எரிப்பு தமிழர் அடையாளத்தில் ஏற்பட்ட வடு.
அழிக்கப்பட்ட நூலகங்கள் என்ற தலைப்பில் ஒரு நீண்ட பட்டியலே விக்கிப்பீடியாவில் உள்ளது. கி.மு. 206 சீன ஆவணக்காப்பகம் முதல் 2014 போஸ்னிய ஆவணக்காப்பகம் வரை அந்தப் பட்டியல் நீள்கிறது. பல சமயங்களில் நூலக எரிப்பு இனப்படுகொலைக்கு முன்னே வரும் மணியோசையாகவும் உள்ளது.
நூல்கள் X நூலகங்கள்
பொது நூலகங்களை எரிப்பதற்கும், ஒரு வாசகர் தான் காசு கொடுத்து வாங்கிய, பரவலாகச் சந்தையில் கிடைக்கும், தனது உடைமையான நூலை எரிப்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. ஒருவர் தனது ஒரு நூல் பிரதியை அழிப்பதால் அறிவுச் சேகரம் எதுவும் நிரந்தரமாக அழிக்கப்படுவதில்லை. டிஜிட்டல் யுகத்தில், நாம் போதிய கவனம் எடுத்தால், அத்தகைய அழிப்பு இனி சாத்தியமும் இல்லை. ஒரு வாசகர் அல்லது ஒரு இயக்கம் ஒரு நூலை எரிப்பது அவர்தம் கருத்து மற்றும் செயல்பாட்டுச் சுதந்திரம் சார்ந்ததுதான். நூலை எரிப்பது அதன்மீது வைக்கப்படும் இறுதி விமர்சனம் என்று கொள்ளலாம். தேசியக் கொடியை எரிப்பதுகூட அமெரிக்காவில் வெளிப்பாட்டுச் சுதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
பாசிஸ்ட்டுகள் நூல்களை எரித்தார்கள் என்பதால், நூல்களை எரிப்பவர்கள் எல்லாம் பாசிஸ்ட்டுகள் அல்ல. மனுதர்மத்தையும் கம்பராமாயணத்தையும் இந்திய அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளையும் எரித்த அம்பேத்கரும் பெரியாரும் அண்ணாவும் பாசிஸ்ட்டு களா? இங்கே நூல் எரித்தல் என்பதை பாசிசத்தின் வெளிப்பாடாக அல்ல மாறாக அப்பிரதிகள் பற்றிய கடும் விமர்சனமாக அல்லது நிராகரிப்பாகவே பார்க்க வேண்டும்.
சரி, நூல் எரிப்பு அதிர்ச்சி தருவதற்கு என்ன காரணம்? 1,000 மின்நூல்கள் அடங்கிய ஒரு மின் தகடு எரிக்கப்படும் காட்சி நமக்கு அதிர்ச்சி தருமா? அது பாசிசமாக வருணிக்கப்படுமா? இல்லை. காரணம், அச்சிட்ட நூலைச் சுற்றி ஒரு புனித ஒளிவட்டம் உருவாகியிருக்கிறது. இதில் உலகப் பொதுவான அம்சங்களும் நமது பண்பாட்டுக்குரிய கூறுகளும் உண்டு. குறுந்தகட்டில் கால் பட்டால் யாரும் கண்ணில் ஒற்றிக்கொள்வது இல்லை.
புனிதப் பொருட்களா நூல்கள்?
முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகள் புனிதமாகக் கருதப்பட்டன. இன்றும்கூட எல்லா ஓலைச்சுவடிகளும் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன. அவற்றின் உள்ளடக்கம்சார்ந்து அவை மதிப்பிடப்படுவதில்லை. சைவ மடங்கள் முற்காலத்தில் அச்சு நூல்களை மலிவானவையாகக் கருதி அனுமதி மறுத்திருந்தன.
பின்னர், காலப்போக்கில் அச்சு நூலின் மீதும் புனிதம் படிந்துவிட்டது. நூல்கட்டை உடைக்கக் கூடாது, அட்டை கசங்கிவிடக் கூடாது, தாளை மடக்கக் கூடாது, நூல் பக்கங்களில் அடிக்கோடிட்டு எழுதக் கூடாது என்பன போன்ற மதிப்பீடுகள் நவீனத்துவத்தின் தாக்கத்தால் உருவானவை என்று எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் பேராசிரியருமான டிம் பார்க்ஸ் குறிப்பிடுகிறார். இத்தகைய புனிதப் பார்வை ஒரு நூலை மதிப்பிடுவதற்குப் பெருந்தடையாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அத்தோடு, இந்தியச் சூழலில் சரஸ்வதி கடாட்சமும் சேர்ந்துவிட்டது!
நூல்கள் தம்மளவில் பொக்கிஷம் அல்ல. அவற்றின் உள்ளடக்கமே அவற்றின் முக்கியத்துவத்தை உருவாக்க வேண்டும். அவற்றின் உள்ளடக்கம் பற்றித் தனது கருத்தை உருவாக்கிக்கொள்ள ஒரு வாசகருக்கு முழு உரிமை உள்ளது. தனது மதிப்பீட்டின் அடிப்படையில் தனது உடைமையான ‘சத்தியசோதனை’ பிரதியை எரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, ஒரு வாசகர் அப்படிச் செய்தால், அது அவரது வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்றே பார்க்கப்பட வேண்டும், பாசிசச் செயல்பாடாக அல்ல.
ஒரு நூல் என்பது இன்று உள்ளடக்கம்தான். அச்சிட்ட புத்தகம் அதன் ஒரு உருவம் மட்டும்தான். ஒரு மின்நூலை அழிக்க, ‘அழி’ என்று ஒரு உத்தரவிட்டால் போதும். அதே தகவல் அழிப்புதான் ஒரு அச்சுப் பிரதியை எரிக்கும்போதும் நிகழ்கிறது. ஆனால், புத்தகக் காதலர்களின் மனம் துணுக்குறுகிறது. ஆசையாகத் தடவி, முகந்து, புரட்டி, படித்து, பாதுகாத்துக் கொண்டாடப்படும் ஒரு கருத்துப் பேழை எரிக்கப்படும்போது ஏற்படும் வலியை நாம் புரிந்துகொள்ள முடியும். இருப்பினும், கருத்து மற்றும் செயல்பாட்டுச் சுதந்திரம் ஆகப் பரந்து விரிந்ததாக இருப்பதே ஒரு விவேகமான சமூகத்தின் அடையாளம். புத்தக எரிப்பு அத்தகையதொரு செயல்பாட்டுச் சுதந்திரம்தான்!
- கண்ணன், ‘காலச்சுவடு’ இதழாசிரியர்,
பதிப்பாளர்,
தொடர்புக்கு: kannan31@gmail.com