

கடந்த 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய மத்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், தேசிய தேர்தல் கண்காணிப்பு தொடர்பான மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா பேசியதாவது:
நாட்டில் 1,600-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 200-க்கும் குறைவான கட்சிகளே தேர்தலில் பங்கேற்று வருகின்றன. கடந்த 5 ஆண்டு, 7 ஆண்டு அல்லது 10 ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை தானாகவே ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இரண்டு மூன்று மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலில் ஒருமுறையாவது போட்டியிடாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
தேர்தல் ஆணையத்தில் சிலர் போலியாக கட்சிகளை பதிவு செய்துவிட்டு, அரசியலை விடுத்து வேறு பல நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பணம் இல்லை, அல்லது அரசே தேர்தலுக்கான பணத்தை ஒதுக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு இங்கு இடமில்லை.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் வருமான வரி விலக்கு உட்பட பல பயன்களை அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன.
‘நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் வெற்றி பெறவில்லை’ என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஆனால், நகராட்சி, பஞ்சாயத்து தேர்தலில்கூட போட்டியிடாத பல கட்சிகள் உள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது.
உலகிலேயே முதல் நாடு
ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி இந்த ஆண்டில் முடிந்துவிடும். அப்போது, உலகிலேயே வாக்காளர்களின் அங்க அடையாளம் (பயோமெட்ரிக்) அடங்கிய வாக்காளர் பட்டியலைக் கொண்ட முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் பிரம்மா தெரிவித்தார்.