

பி.எப். சந்தாதாரர்களுக்கு வீட்டு வசதி
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில் கூறியதாவது: பி.எப். திட்டத்தில் 5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களுக்காக வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பாக ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பி.எப். நிதியில் ரூ.27,448 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ரயில் பாதைகள் மின்மயம்
மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் கூறியதாவது: நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்காக 2011 முதல் 2014 வரை ரூ.3820 கோடி செலவிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.3765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
300 மாதிரி கிராமங்கள்
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்தர் சிங் மாநிலங்களவையில் கூறியதாவது: நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை தடுக்க நாடு முழுவதும் 300 மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த கிராமங்களில் நகரங்களுக்கு இணையாக சாலை, மின்சாரம், குடிநீர், பொதுபோக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ.65 கோடியை செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதில் மத்திய அரசு 30 சதவீத நிதியை வழங்கும் என்றார்.
கங்கை படைப்பிரிவுக்கு ஒப்புதல்
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சன்வார் லால் ஜாட் மாநிலங்களவையில் கூறியதாவது: கங்கை நதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 4 பட்டாலியன்கள் அடங்கிய படைப்பிரிவை அமைக்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் படைப் பிரிவினர் கங்கை நதிக்கரையில் மரக்கன்றுகள் நடுவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என்று தெரிவித்தார்.
கணினியில் வரலாற்று ஆவணங்கள்
மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மக்களவையில் கூறியதாவது: இந்திய வரலாறு தொடர்பான 11 லட்சம் பழமையான ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக இதுவரை ரூ.25 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மேலும் 11 லட்சம் ஆவணங்களை கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
6400 தொழிலாளர்கள் வேலையிழப்பு
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில் கூறியதாவது: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 161 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த ஆலைகளில் பணியாற்றிய 6442 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
சென்னை விமான நிலையம் மேம்பாடு
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணைய.மைச்சர் மகேஷ் சர்மா மக்களவையில் கூறியதாவது: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 6 விமான நிலையங்களை சர்வதேச தரத்துக்கு இணையாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 15 கீரின்பீல்டு விமான நிலையங்களுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மோசமான சேவை உள்ளிட்டவை தொடர்பாக கடந்த ஓராண்டில் விமான பயணிகள் 462 புகார்களை அளித்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
சிறுபான்மையினருக்கு உதவித்தொகை
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் சிறுபான்மையின மாணவர்களுக்காக ரூ.4800 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்ட காரணத்தால்தான் பொது பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 16 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நிலக்கரி சுரங்க மசோதா அறிமுகம்
மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஒதுக்கீடு) மசோதா 2015-ஐ மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தம்
மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட 6 அவசர சட்டங்களில் ஒன்றான குடியுரிமை சட்டத் (திருத்த) மசோதா 2015 மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்திய வம்சாவளி அட்டைதாரர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்திய அட்டைதாரர்கள் இடையே உள்ள பாகுபாட்டைக் களைய இந்த மசோதா வகை செய்கிறது.