Published : 16 Mar 2015 01:54 PM
Last Updated : 16 Mar 2015 01:54 PM

கேரள சட்டப்பேரவையில் வன்முறை: எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட்

கேரள சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை தொடர்பாக, இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) எம்எல்ஏக்கள் 5 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப் பட்டனர்.

இதுதொடர்பான தீர்மானத்தை முதல்வர் உம்மன் சாண்டி கொண்டு வந்தார். இத்தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து உறுப்பினர்கள் இ.பி.ஜெய ராஜன், கே.டி.ஜலீல், வி.சிவன்குட்டி, கே.குஞ்சா கமது, கே.அஜீத் ஆகியோர் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் என்.சக்தன் அறிவித்தார்.

இதற்கு இடதுசாரி உறுப் பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். அவர்கள் அவையின் மையப்பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இடதுசாரி கட்சிகளின் பெண் எம்எல்ஏக்களை தாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முதல் வரின் தீர்மானம் ஒருதலைப் பட்சமானது. கே.எம்.மாணி அமைச்சர் பதவியில் நீடிப்பது மாநிலத்துக்கு அவமானம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

தொடர்ந்து அவையில் அமளி நிலவியதால், அவையை வரும் வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

அவைக்கு வெளியே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறும்போது, “கே.எம்.மாணி பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

முதல்வர் உம்மன் சாண்டி கூறும்போது, “ஆளும் காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) எம்எல்ஏக்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. வெள்ளிக் கிழமை அவையில் என்ன நடந்தது என்று மக்களுக்குத் தெரியும். எங்கள் எம்எல்ஏக்கள் பலியாடுகளாக ஆவதற்கு அனுமதிக்க மாட்டோம். அச்சுதானந்தன் தன்னிலை மறந்து பேசுகிறார். 5 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் மக்கள் முன்பு எங்களுக்கு குற்ற உணர்வே ஏற்படும்” என்றார்.

முன்னதாக நேற்று காலை அவை தொடங்கியதும், சபா நாயகர் சக்தன், வெள்ளிக் கிழமை அவையில் நடந்த வன்முறை குறித்து பேசினார். “இந்த வன்முறையால் கேரளத் துக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள் ளது. இதற்கு பொறுப்பேற்று எம்எல்ஏக்கள் அனைவரும் கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, வன்முறை எல்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்ய அவையை சிறிதுநேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார். ஆளும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

பின்னணி

கேரள நிதியமைச்சர் கே.எம். மாணி, மதுபான பார் உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டப் பேரவையில் கே.எம்.மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வன் முறையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகரின் இருக்கை, கணினி, ஒலி பெருக்கி உள்ளிட்டவை சேதப் படுத்தப்பட்டன. எம்எல்ஏக்கள் கைகலப்பிலும் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர்.

கேரள நிதியமைச்சர் கே.எம். மாணி, மதுபான பார் உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டப் பேரவையில் கே.எம்.மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வன் முறையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகரின் இருக்கை, கணினி, ஒலி பெருக்கி உள்ளிட்டவை சேதப் படுத்தப்பட்டன. எம்எல்ஏக்கள் கைகலப்பிலும் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர்.

இதுதவிர பேரவைக்கு வெளியே இடதுசாரி முன்னணி மற்றும் யுவமோர்ச்சா தொண்டர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

பேரவையில் எதிர் கட்சி உறுப்பினர்கள் தாக்கப் பட்டதை கண்டித்து இடதுசாரி கட்சிகள் கேரளத்தில் கடந்த சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தின.

மறுநாள், இதற்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

சட்டப்பேரவை செயலாளர் அளித்த புகாரின் பேரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x