

இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 26 சதவீதமாக உள்ளது. இந்த வரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2008-ம் ஆண்டிலிருந்து இந்த மசோதாவைக் கொண்டு வர பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசால் இதை நிறைவேற்ற முடியவில்லை. காப்பீட்டுத் துறையில் அந்நிய நிறுவனங்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால் இந்த மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாநிலங்களவை தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில், "காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு மற்றும் அந்நிய நிறுவன முதலீடு ஆகிய இரண்டையும் சேர்த்து 49 சதவீதம் என்ற ஒருங்கிணைந்த வரம்பு இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டதாக" குறிப்பிட்டது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கை ஆளும் பாஜக அரசுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்தது. ஏனெனில் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது.