

2002-ம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி, ஒருவரைக் கொன்றது மற்றும் மேலும் நான்கு பேரைக் காயப்படுத்தியது தொடர்பான வழக்கில் நடிகர் சல்மான் கானின் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் திங்கட் கிழமை வாக்குமூலம் அளித்த சல்மான் கானின் கார் ஓட்டுநர் அசோக் சிங், காரை தானே ஓட்டிவந்ததாகக் கூறினார்.
இது குறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் பிரதீப் காரத் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, "இத்தனைகால விசாரணை காலக்கட்டத்தில் எந்த ஒரு நிலையிலும் அரசு தரப்போ, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்போ காரை ஓட்டுநர் அசோக் சிங் ஓட்டினார் என்று கூறவில்லை.
அசோக் சிங் பற்றி ஒரேயொரு சிறு குறிப்பு மட்டுமே கோர்ட்டில் கூறப்பட்டது. அதாவது அவர் பகலில்தான் சல்மான் கானுக்கு கார் ஓட்டுவார் என்பதே அது. இரவில் அவர் காரை ஓட்டியதாக வழக்கின் எந்த நாளிலும் குறிப்பிடப்படவில்லை" என்றார்.
குறுக்கு விசாரணையில், குற்றத்தை ஏற்க பணம் கொடுக்கப்பட்டதா என்று அசோக் சிங்கிடம் கேட்கப்பட்டது. ஆனால் அசோக் சிங் இதனை கடுமையாக மறுத்தார்.
நீதிமன்ற நடைமுறைகள் தனக்குத் தெரியாது என்றும் அதனால்தான் முன்னதாக இந்த வழக்கில் ஆஜராகி உண்மையைக் கூறவில்லை என்று அசோக் சிங் நீதிபதியிடம் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் தான் 5 முதல் 8 நிமிடங்கள் வரை இருந்ததாக அசோக் சிங் குறிப்பிட்டார். சல்மான் கான் தந்தையே தன்னை கோர்ட்டில் ஆஜராகி உண்மையைக் கூறுமாறு தன்னிடம் கூறியதாக அசோக் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.