டெல்லி பலாத்கார குற்றவாளியின் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்

டெல்லி பலாத்கார குற்றவாளியின் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்
Updated on
1 min read

பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் பெண்களை தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய டெல்லி பலாத்கார குற்றவாளியின் வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, ஏ.பி.சிங் ஆகிய இருவருக்கும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சர்ச்சைக்குள்ளான அந்த ஆவணப்படத்தில் பேசிய வழக்கறிஞர்கள், எம்.எல்.சர்மா, ஏ.பி.சிங் ஆகிய இருவரும் பெண்களுக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்களை முன் வைத்திருந்ததாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கும் பெண்களை இழிவு படுத்திப் பேசியது தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இத்தகவலை பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.

டெல்லியில், நேற்றிரவு நடைபெற்ற பார் கவுன்சில் ஆஃப் இந்தியா செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. தொழில் தர்மத்துக்கு எதிராக இந்த இரண்டு வழக்கறிஞர்களும் செயல்பட்டதற்கான முகாந்தரம் இருப்பதாக பார் கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வழக்கறிஞர்கள் சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, ஏ.பி.சிங் விளக்கம் ஏற்புடையதாக இல்லையென்றால் அவர்கள் இருவரும் வழக்கறிஞராக பணி செய்வதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கூறும்போது: "நான் எந்த தவறும் செய்யவில்லை" என்றார்.

பிபிசி ஆவணப்படத்தில் பேசிய எம்.எல்.சர்மா, "பெண்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெளியில் செல்வதாலேயே பலாத்காரங்கள் நடப்பதாக" கூறியிருந்தாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in