சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆஜர்

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆஜர்
Updated on
1 min read

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, கருணாநிதியின் உறவினர் அமிர்தம் உள்ளிட்டோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்கள். அவர்கள் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீது புதன்கிழமை (28-ம் தேதி) விவாதம் நடைபெற உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, அக்கட்சி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட 10 பேர் மீதும் கலைஞர் டி.வி. உள்ளிட்ட 9 நிறுவனங்கள் மீதும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கலைஞர் டி.வி.க்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது கிளை நிறுவனங்கள் வழியாக ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாக 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்றம், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருவதால், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக இவ்வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு, சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆ. ராசா, கனிமொழி, அமிர்தம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். தயாளு அம்மாள் ஆஜராகவில்லை.

தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஏற்கெனவே 2ஜி வழக்கில் வயோதிகம் காரணமாக தயாளு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரா வதில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது” என்று கூறி, அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார். அதேபோல், இந்த வழக்கிலும் நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். திங்கள்கிழமை மட்டும் நேரில் ஆஜராவதில் இருந்து ஓ.பி.சைனி விலக்கு அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் தொடர்புடைய அனைவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

தயாளு தரப்பில் தாக்கல் செய்துள்ள மனு மற்றும் பிற ஜாமீன் மனுக்கள் குறித்து பதில் அளிக்கும்படி அமலாக்கப்பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை படித்துப் பார்க்க கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி ஓ.பி.சைனி, “இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இதில் காலதாமதம் செய்ய முடியாது. தினந்தோறும் வழக்கை நடத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. எனவே, 28-ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in