

பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய இளைஞரை பொதுமக்கள் சிறையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அடித்துக் கொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாகாலாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தச் சம்பவம் காரணமாக எந்தக் கலவரமும் ஏற்படாமல் இருக்க உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகாலாந்தில் தற்போது நிலைமை சற்று சீராகி உள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு இன்னும் தளர்த்தப்படவில்லை.
நாகாலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவரை வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்தே கொன்று அங்குள்ள மணிக் கூண்டில் மாட்டினர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த திமாப்பூரில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசு பாதுக்காப்புப் பணியில் ஈடுப்பட்டு வருவதால், நிலைமை சற்று சீரடைந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறாமல் உள்ளது.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களின் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கைதி வங்கதேசத்தவர் என்ற நிலையில், "அமைதியை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் இஸ்லாமிய இயக்கங்கள் பிரச்சாரங்களை செய்கின்றனர். எத்தகைய இன மோதல்கள் வெடிக்காமல் இருக்க வேண்டும்" என்று இஸ்லாமிய ஒன்றிமைப்பு சபை தலைவர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
காட்டுமிராண்டித்தனம்: அசாம் முதல்வர்
இதனிடையே, நாகாலாந்து சம்பவத்துக்கு அசாம் முதல்வர் தரூண் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார். "காவலில் இருந்த இளைஞரை தெருவுக்கு இழுத்து வந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொன்றுள்ளதை ஏற்க முடியாது. சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. இத்தகைய செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பலாத்காரத்தில் ஈடுப்பட்ட இளைஞரின் செயலும் இதற்கு இணையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் சட்டத்தின் வழியே சென்று அவரை தண்டித்திருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.