

பெங்களூருவில் மர்மமான முறையில் இறந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்படுத்தும் வகையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
ஒரு தலை காதல் காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டதாக சிஐடி போலீஸாரின் இடைக்கால அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக வணிக வரித்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி கடந்த 16-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மரணத்தில் மர்மங்கள் நிலவியதால் கர்நாடகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து கர்நாடக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ரவியின் வழக்கை விசாரித்த சிஐடி போலீஸாரின் இடைக்கால விசாரணை அறிக்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஐஏஎஸ் அதிகாரியின் மரணத்திற்கு ஒரு தலை காதலே காரணம் என அவர் கடைசியாக அனுப்பிய 'வாட்ஸ் ஆப்' செய்தி மூலம் தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சிஐடி போலீஸாரிடம் மண்டியாவில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்துள்ள 6 பக்க வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
டி.கே.ரவியின் மரணம் தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டியிடம் நானாக வாக்குமூலம் அளிக்க முன்வந்தேன். வழக்கு சிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதால் மறுநாள் அவர்களிடம் வாக்குமூலம் அளித்தேன்.
2009-ம் ஆண்டு டி.கே.ரவியும், நானும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்றோம். அப்போது இருந்தே அவருக்கும் எனக்கும் பணி நிமித்தமான நட்பு இருந்தது. நான் ரவியின் சொந்த மாவட்டமான துமகூருக்கு பணி அமர்த்தப்பட்ட போது அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறேன். ரவி கோலார் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நானும் எனது கணவரும் அவரை அடிக்கடி சந்தித்து பேசி இருக்கிறோம். எங்களது நட்பின் காரணமாக எனது வீட்டிற்கு அவரும், அவரது வீட்டிற்கு நானும் பலமுறை சென்றிருக்கிறோம். எனது கணவரும், ரவியும் நண்பர்களாக மாறினார்கள்.
இந்நிலையில் ரவியின் நடவடிக்கையிலும், என்னிடம் பேசும் விதத்திலும் மாற்றம் ஏற்பட்டது. அதனை அறிந்து ரவியை கடுமையாக கண்டித்தேன். ரவியின் நடவடிக்கையை எனது கணவரிடம் எடுத்துரைத்தேன். கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு ரவி எனக்கு தொடர்ச்சியாக வாட்ஸ் ஆப் மூலம் தவறான செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தார்.
அதே போல மரணத்திற்கு முதல் நாளான மார்ச் 15-ம் தேதி மாலை 4.25 மணிக்கு எனக்கு ஒரு தகவல் அனுப்பினார். அதில் நான் ஒரு மோசமான முடிவை எடுக்கப் போகிறேன். நீ என்னை அழைத்து பேசுவாய் என்று நம்புகிறேன். இரவு 9 மணிவரை காத்திருப்பேன் என அனுப்பி இருந்தார். நான் அழைக்கவில்லை. உடனடியாக என்னை சந்திக்க வேண்டும் என கேட்டார். அதற்கு நான் மறுத்து போனில் விஷயத்தை தெரிவிக்குமாறு கூறினேன்.
மார்ச் 16-ம் தேதி காலை முதலே குறுஞ்செய்திகள் அனுப்பினார். நான் எதற்கும் பதில் அனுப்பாததால் காலை 11 மணிக்கு செல்போனில் அழைத்தார். நான் எனது கணவரிடம் செல்போனை கொடுத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு எனக்கு நீண்ட செய்தியை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி இருந்தார். அதில், “நாம் அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம்... விரைவில் என்னுடைய மரணச் செய்தியைக் கேட்பாய்... நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறேன்'' என அனுப்பி இருந்தார்.
அன்றிரவு 8 மணி அளவில் ரவியின் மரண செய்தியை கேட்டேன். இதனால் அதிர்ச்சி அடைந்து நொறுங்கி போனேன். ரவியின் மரணம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே இந்த வாக்குமூலத்தை அளிக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் தடை
இந்நிலையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கணவர் சுதிர் ரெட்டி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அதில் சிஐடி போலீஸாரின் இடைக்கால அறிக்கையை வெளியிட தடை விதிக்க வேண்டும். தனது மனைவியின் பெயரை ஊடகங்களில் வெளியிட கூடாது என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் சிஐடி போலீஸாரின் இடைக்கால அறிக்கையை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது.
இதனிடையே மடிவாளா காவல்நிலைய ஆய்வாளரும், ரவியின் மனைவி குசுமா, மாமனார் ஹனுமந்தராயப்பா ஆகியோர் ரவியின் மரணத்தில் முக்கிய தடயங்களை அழித்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு முன் இந்த செயலில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் டி.ஜே.ஆபிரஹாம் பெங்களூரு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். முன்னதாக இதே போன்ற புகாரை ரவியின் மாமனார் ஹனுமந்தராயப்பா சிஐடி போலீஸார் மீது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.