

ரயில்களில் தனியாக பயணம் செய்யும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு ரயில்களில் கீழ்ப் படுக்கை ஒதுக்கும் வசதி இரண்டில் இருந்து நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மூத்தக் குடிமக்கள், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ரயில்களில் தனியாக பயணம் செய்தால் கணினி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அவர்களுக்கு கீழ்ப் படுக்கை (லோயர் பெர்த்) தானாகவே ஒதுக்கப்படும் வசதி உள்ளது.
இதன்படி, ஒரு பெட்டிக்கு இரண்டு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இனிமேல், இப்படுக்கையின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்களில் மாற்றுத் திறனாளிகள், மூத்தக் குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு நடு (மிடில்) அல்லது மேல் (அப்பர் பெர்த்) படுக்கை ஒதுக்கப்பட்டால், டிக்கெட் பரிசோதகரே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கு கீழ்ப் படுக்கையை ஒதுக்கித் தர அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.