

நாகாலாந்தில் பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர் அடித்துக் கொல்லப்பட்ட திமாப்பூரில் நேற்று ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. 3 நாட்களுக்குப் பிறகு வர்த்தக செயல்பாடுகள் அங்கு மீண்டும் தொடங்கின.
நாகாலாந்து மாநிலம் திமாப்பூரில் பழங்குடியின பெண் ஒருவரை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சையது பரீத்கான் (35) என்பவர் கடந்த மாதம் 23-ம் தேதி பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை போலீஸார் கைது செய்து திமாப்பூர் மத்திய சிறையில் அடைந்திருந்தனர்.
இந்நிலையில் பலாத்கார சம்பவத்துக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை, சிறைக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இவர்கள் சிறைக்குள் நுழைந்து பரீத்கானை வெளியே இழுத்துவந்து அடித்து உதைத்தனர். இதில் பரீத்கான் உயிரிழந்தார்.
இந்நிலையில் சிறைக்கைதி கொலைக்கு எதிராகவும் போராட் டம் வெடித்ததை தொடர்ந்து திமாப்பூரில் நேற்று முன்தினம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நாகாலாந்தில் இன்டர்நெட், எஸ்எம்எஸ், எம்எம்எஸ் சேவைக்கு செவ்வாய்க்கிழமை மாலை வரை தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் திமாப்பூரில் நேற்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
திமாப்பூர் கூடுதல் எஸ்.பி. காகேட்டோ நேற்று கூறும்போது, “திமாப்பூரில் 144 தடை உத்தரவு மட்டும் அமலில் உள்ளது. கைதி அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை 43 பேரை கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைதி கொல்லப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.” என்றார்.
அடித்துக்கொல்லப்பட்ட பரீத்கானின் உடல் அவரது சொந்த ஊரான, அசாம் மாநிலத் தின் கரீம்கஞ்ச் மாவட்டம், போஸ்லா என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.