

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மங்கள்யான் விண் கலத்தின் பயணம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாக இஸ்ரோவின் இயக்குநர் தேவி பிரசாத் கார்னிக் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி பிஎஸ்எல்வி சி-25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி 10 மாதங்கள் நீண்ட பயணம் மேற்கொண்டது. செவ் வாயை நெருங்கியதை அடுத்து கடந்த செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்டது. முதல் முயற்சியிலே செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் விண்கலத்தை இணைத்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் தேவி பிரசாத் கார்னிக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1,340 கிலோ எடையுள்ள மங்கள்யான், செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் இணைந்து நேற்றுடன் 6 மாதங்கள் நிறை வடைந்தது. மங்கள்யானின் வெற்றிகர பயணம் செவ்வாய் கிரகம் குறித்த அடுத்தகட்ட ஆய்வுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக மங்கள் யானில் உள்ள புகைப்பட கருவி அவ்வப்போது எடுத்து அனுப்பும் புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் கிரகத்தின் புறத் தோற்றம், அங்குள்ள மலைகள், நிலம் உள்ளிட்டவை குறித்த புகைப் படங்கள் இஸ்ரோ மையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றன. மங்கள்யான் விண்கலம் 6 மாதங் கள் வரை செயல்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித் திருந்த நிலையில் நேற்றுடன் அதன் ஆயுட்காலம் முடிவடை கிறது. இருப்பினும் மங்கள்யான் விண்கலத்தில் 37 கிலோ எரிப்பொருள் மீதம் இருப்பதால், அதன் ஆயுட்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
இதனால் செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப சூழல், நீர் ,நில ஆதாரங்கள் ஆகியவை குறித்து மேலும் அறியும் வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. குறிப்பாக மங்கள் யான் விண்கலத்தில் உள்ள 4 முக்கிய கருவிகள் அங்கு மீத்தேன், ஹைட்ரஜன் வாயு குறித்த சோதனையை தொடர்ந்து மேற் கொள்ளும். அதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு பல முக்கிய தகவல்கள் கிடைக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் மங்கள் யான் விண்கலம் அவ்வப்போது எடுத்து அனுப்பும் அற்புதமான புகைப்படங்கள் இஸ்ரோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப் பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.