

பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு சனிக்கிழமை வந்த நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பாஜக தலைமை அலுவலகம் வரை சுமார் 16 கி.மீ. தொலைவுக்கு மோடி காரில் பேரணியாகச் சென்றார்.
குஜராத்தில் இருந்து காலை 9 மணிக்கு மோடி டெல்லி வந்தார். விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அங்கிருந்து அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமையகம் வரை மோடி பேரணியாகச் சென்றார்.
வழி நெடுக பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் திரண்டு நின்று மோடியை ஆரவாரத்துடன் வரவேற்றனர். கார் கதவு படியில் நின்று மக்களை நோக்கி கையசைத்தபடியே மோடி சென்றார்.
கட்சி தலைமை அலுவலகத்தில் மோடி பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றி எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது லட்சக்கணக்கான தொண்டர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன். 125 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி.
கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அந்த வகையில் 1952 முதல் பாஜகவுக்காக உயிர்நீத்த தொண்டர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.
நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.