

‘‘டெல்லி மாணவி பலாத்கார குற்றவாளியின் பேட்டியை ஊடகங்களில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம்’’ என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகக் கூறினார்.
டெல்லியில் மருத்துவ மாணவியை (நிர்பயா) 6 பேர் கும்பல் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி கொடூரமாக பலாத்காரம் செய்தது. அவருடைய ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், 13 நாட்கள் கழித்து சிங்கப்பூர் மருத்துவமனையில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நாடு முழுவதும் இதைக் கண்டித்து பெரும் போராட்டம் நடந்தது. இதையடுத்து பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உட்வின் என்பவர் பிபிசி - சேனல் 4 நிகழ்ச்சிக்காக ஒரு ஆவணப்படும் தயாரித்துள்ளார். ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்துக்காக, நிர்பயா பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கிடம் திஹார் சிறையில் பேட்டி எடுத்துள்ளனர். அந்தப் பேட்டியில் பெண்களை மிகவும் தரக்குறைவாக முகேஷ் சிங் விமர்சித்துள்ளார். பலாத்காரத்துக்குப் பெண்கள்தான் பொறுப்பு. அவர்கள் ஆபாசமாக உடை அணிந்து இரவில் வெளியில் சுற்றுக்கின்றனர் என்றெல்லாம் ஆணவமாகக் கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படத்தை சர்வதேச பெண்கள் தினமான வரும் 8-ம் தேதி வெளியிட பிபிசி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், முகேஷ் சிங்கின் பேட்டிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஆவணப்படத்துக்காக டெல்லி திஹார் சிறையில், பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திஹார் சிறை அதிகாரிகளும் பேட்டி எடுக்க அனுமதித்துள்ளனர்.
ஆனால், பேட்டி எடுக்கப்பட்ட பின்னர் திருத்தம் செய்யப்படாத (எடிட் செய்யாத) காட்சிகளை சிறை அதிகாரிகளிடம் காட்டி இருக்க வேண்டும். அல்லது பேட்டியை ஒளிபரப்புவதற்கு முன்போ, பிரசுரிப்பதற்கு முன்போ அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற முன் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். பேட்டியை ஒளிபரப்பு செய்வதற்கு முன்னர் சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. இதுபோல் விதிமுறைகளைப் பின்பற்றி இருந்தால், விதிமீறலுக்கு இடம் இருந்திருக்காது.
பேட்டி விவரத்தை நேற்று அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். மனவேதனை அடைந்தேன். உடனடியாக அதிகாரிகளுடன் பேசி, ஒளிபரப்பை தடை செய்வதற்கு நடவடக்கை எடுக்கும்படி உத்தரவிட்டேன். பேட்டி எடுத்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். பலாத்கார சம்பவத்தை மையமிட்டு அதை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது. பலாத்கார குற்றத்துக்காக தண்டனை பெற்ற ஒருவரிடம் திஹார் சிறையில் பேட்டி எடுக்க எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது அதிர்ச்சிக்கு உரிய விஷயமாக உள்ளது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி அதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பேட்டி ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது.
பேட்டி எடுத்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ள விஷயம் சிறை அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது. உடனடியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது.
அதில், 15 நாட்களுக்குள் எடிட் செய்யப்படாத அந்த பேட்டி காட்சி அடங்கிய வீடியோவை சமர்ப்பிக்க வேண்டும். விதிகளை மீறி அதை ஒளிபரப்ப கூடாது என்று கேட்டுள்ளனர். அதன்படி ஆவணப்படத்தை சிறை அதிகாரிகளுக்குக் காட்டி உள்ளனர்.
ஆனால், அது எடிட் செய்யப்பட்ட படம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
பெண்களை மதிப்பது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிய விஷயம். இந்த விஷயத்தில் பெண்களின் பாதுகாப்பு, கவுரவத்தை மத்திய அரசு முழுமையாக உறுதிப்படுத்தும்.
மேலும், குற்றவாளியின் பேட்டியை வெளிநாடுகளிலும் தடை செய்வதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
அத்துடன், எதிர்காலத்தில இதுபோல் ஒரு சம்பவம் நடைபெறுவதைத் தடுக்க தற்போதுள்ள விதிமுறைகளை பரிசீலிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம். திஹார் சிறையில் கைதிகளைச் சந்திக்கவும், பேட்டி எடுக்கவும் இப்போதுள்ள சட்ட விதிகளை மறு பரிசீலனை செய்யவும் கூறியுள்ளோம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
முன்னதாக இந்தப் பேட்டி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக இந்தப் பேட்டி குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பெண் உறுப்பினர்கள் கோரினர். ராஜ்நாத் சிங் விளக்கம் திருப்தியாக இல்லை என்று கூறி ஜெயா பச்சன் உட்பட சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல் மக்களவையிலும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்ச லிட்டனர்.
பலாத்கார குற்றவாளியிடம் தரக்குறைவாக ஒரு பேட்டி எடுக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் திஹார் சிறை இயக்குநர் வர்மா விளக்கம்
நிர்பயா பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி முகேஷ் சிங்கிடம், பிபிசி பேட்டி எடுத்தது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி திஹார் சிறை இயக்குநர் ஜெனரல் அலோக் குமார் வர்மாவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் உத்தரவிட்டார்.
அதன்படி ராஜ்நாத் சிங்கை வர்மா சந்தித்தார். முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க பிபிசி.க்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது, எங்குப் பேட்டி எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் குறித்து அமைச்சரிடம் வர்மா விளக்கம் அளித்துள்ளார். பத்து நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, திஹார் சிறை கைதிகளை வெளி நபர்கள் சந்திப்பதற்கான விதிமுறைகள் குறித்தும் அமைச்சரிடம் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.