Last Updated : 19 Mar, 2015 09:15 AM

 

Published : 19 Mar 2015 09:15 AM
Last Updated : 19 Mar 2015 09:15 AM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு டைரி-5: நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு ரூ.14.1 கோடி வருமானம் வந்ததா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு காலகட்டத்தில் நால்வரின் மொத்த வருமானம் ரூ.9.34 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சொன்னது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்போ தங்களுக்கு ரூ.32.24 கோடி வருமானம் வந்தது என்றும், இதில் ரூ.14.1 கோடி நமது எம்ஜிஆர் பத்திரிகையின் 'டெபாசிட்' திட்டம் மூலம் வந்ததாகவும் தெரிவித்தது.

இதற்கு அரசு தரப்பு முன்னாள் வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா,''சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு (அரசு தரப்பு சாட்சி 259) தலைமையிலான த‌மிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சசிகலாவுக்கு சொந்தமான சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் அலுவகத்தில் 7.12.1996 முதல் 12.12.1996 வரை சோதனை நடத்தினர். அதில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனமான நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகத்தில் உள்ள வங்கி கணக்குப் புத்தக்கங்கள், வரவு செலவு கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை கைப்ப்பற்றினர்.

அப்போது நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு சந்தா,டெபாசிட் வசூலித்தது தொடர்பான எந்த கணக்கு புத்தகமும் கிடைக்கவில்லை. மேலும் சந்தாதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி காசோலை, வரைவோலை, ரொக்கமாக பெற்றதற்கான ரசீதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நமது எம்ஜிஆர் பத்திரிகை ஊழியர்களிடம் விசாரித்த போது டெபாசிட் திட்டம் தொடர்பாக எந்த விவரமும் தெரிவிக்கவில்லை.

சசிகலா மீது 14.6.1996 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போதோ, 4.6.1997 அன்று இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதோ நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டம் தொடர்பாக கூறவில்லை. வழக்கின் விசாரணையின் போது திடீரென வந்து தனக்கு நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டம் மூலம் ரூ.14.1 கோடி வருமானம் வந்ததாக கூறுவதை ஏற்க முடியாது.

'நமது எம்ஜிஆர் டெபாசிட்' திட்டத்தை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்துவதற்காக 1997-க்கு பிறகு வருமான வரி செலுத்தியுள்ளனர். எனவே நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு வருமானமாக வந்ததாக கூறப்படும் ரூ.14.1 கோடியை நீதிமன்றம் ஏற்கக்கூடாது'' என பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டார்.

சசிகலா தரப்பு பதில்

இதற்கு சசிகலா தரப்பு, ''அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக வெளிவரும் 1991-96 காலக்கட்டத்தில் நமது எம்ஜிஆர் பத்திரிகையின் வளர்ச்சி நிதிக்காக டெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி வாசகர்கள் ரூ.12 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.18 ஆயிரம் வரை செலுத்தினால், முறையாக நமது எம்ஜிஆர் பத்திரிகை 5,10, 15 எண்ணிக்கையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து 9,000 பேர் டெபாசிட் திட்டத்தில் இணைந்தனர்.

இதன் மூலம் நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு வருமானமாக ரூ.14.1 கோடி வந்தது. இதற்கு 1997-ம் ஆண்டு, அதாவது இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பா கவே வருமான வரி செலுத்தப் பட்டுள்ளது. மேலும் நமது எம்ஜிஆர் டெபாசிட் திட்டத்தில் இணைந்து பத்திரிகை பெற்றதற்காக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா (குற்றவாளிகள் தரப்பு சாட்சி 61),அதிமுக நிர்வாகிகள் ஆதி ராஜராமன்(குற்றவாளிகள் தரப்பு சாட்சி 31) உட்பட 29 பேரும், சசிகலாவின் ஆடிட்டர்கள் சவுந்திரவேலன், நடராஜன் (குற்றவாளி தரப்பு சாட்சி 2) ஆகியோ ரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்'' என வாதிட்டது.

ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள்

நீதிபதி டி'குன்ஹா தனது தீர்ப்பில்,''நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு டெபாசிட் திட்டத்தின் மூலமாக ரூ14.1 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக சசிகலா சொல்கிறார்.ஆனால் டெபாசிட் வசூலித்த‌தற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.1998-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.14.1 கோடிக்கான ஆதாரத்தை கேட்டபோது, நமது எம்ஜிஆர் பத்திரிகையின் பொறுப்பை கவனித்த மேலாளருக்கு முறையாக கணக்குகளை பராமரிக்க தெரியவில்லை'' என்றனர்.

இதே போல மீண்டும் வருமான துறை அதிகாரிகள் 2001-ம் ஆண்டு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆதாரங்களை கோரியபோது,''நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு டெபாசிட் வசூலித்த ரசீதுகளை சென்னை தி.நகர் அருகே கொண்டு சென்றோம். அப்போது எங்களது காரில் இருந்து அந்த ரசீதுகள் திருட்டு போய்விட்டது. இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளோம்''என்றனர். இதனால் சசிகலாவின் வருமான கணக்கை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் 2012-ம் ஆண்டு திடீரென சசிகலா தரப்பு,''நமது எம்ஜிஆர் டெபாசிட் திட்டத்திற்கான ரசீதுகளும், கணக்கு புத்தகங்களும் கிடைத்துள்ளன''எனக்கூறி அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.அந்த ரசீதுகளில் பெரும்பாலனவற்றில் நிறுவனத்தின் பெயரோ, முத்திரையோ இல்லை என்றும், சில ரசீதுகள் மழையில் நனைந்து எழுத்துகள் அழிந்து காணப்படுகின்றன என்றும், ஒரு சில ரசீதுகள் புத்தம் புதிய காகிதங்களாக தென்படுகின்றன என்றும் எதிர் தரப்பில் எடுத்து வைக்கப்பட்டது. அதே போல நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டத்தில் இணைந்தது தொடர்பாக வாக்குமூலம் அளித்த 31 பேரும் எவ்வித ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இதையெல்லாம் தாண்டி நமது எம்ஜிஆர் பத்திரிகை உண்மையிலே டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தால் அதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் அனுமதி பெற வேண்டும். மேலும் தனது பத்திரிகையின் ஆண்டு லாப நஷ்ட கணக்கை ஆண்டுக்கொரு முறை பத்திரிகையில் வெளியிட வேண்டும். இதுபோன்ற ஆதாரங்களை தாக்கல் செய்து நிரூபிக்காததால் ரூ.14.1 கோடியை நமது எம்ஜிஆரின் வருமானமாக ஏற்கமுடியாது'' என தீர்ப்பில் கூறியுள்ளார்.

கருணாநிதி காரணமா?

மேல்முறையீட்டு விசாரணை யின் போது ஜெயலலிதா தரப்பு, “1990-91-ல் சந்தா மூலமாக நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு ரூ.13.54 கோடி வருமானம் வந்தது. இதற்கான வருமான ஆதாரத்தை ஆய்வு செய்த‌ வருமான அதிகாரிகள்,கணக்கு சரியாக இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். இதே போல டெபாசிட் திட்டத்தின் மூலம் 1991-96 காலக்கட்டத்தில் ரூ.14.1 கோடி வருமானம் வந்தது. இதற்கான முறையான ஆவணங்களை தாக்கல் செய்ததால் காலம் கடத்தி வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டது. நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டத்தில் இணைந்த 31 பேரின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.அந்த சாட்சிகளை அரசு தரப்பு குறுக்கு விசாரணை செய்தும்,வேறு ஆதாரங்களை தாக்கல் செய்தும் நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டம் பொய்யானது என நிரூபிக்க முடியவில்லை. இருப்பினும் நீதிபதி குன்ஹா எங்களது வருமானத்தை ஏற்கவில்லை'' என வாதிட்டது.

அதற்கு நீதிபதி குமாரசாமி, ''ஜெயலலிதா 'நமது எம்ஜிஆர்' பத்திரிகை ஆரம்பித்தது போல,'திமுக தலைவர் கருணாநிதி ஏதேனும் பத்திரிகை ஆரம்பித்தாரா?''என கேட்டார். அதற்கு திமுக வழக்கறிஞர், 'கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தாலும், முதலில் அவர் ஒரு பத்திரிகையாளர்.தற்போது 92 வயதிலும் இடைவிடாமல் 'முரசொலி' செய்தித்தாளை நடத்திவருகிறார்''என்றார்.

அதற்கு நீதிபதி,''ஆக மொத்தத் தில் ஜெயலலிதா பத்திரிகை ஆரம்பிப்பதற்கும் கருணாநிதி தான் காரணமா?''என புன்முறுவ லுடன் கேட்டார். இறுக்கமான விசார ணைக்கு நடுவே கலகலப்பான சிரிப்பலை அப்போது எழுந்தது.

மேலும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x