

நாட்டிலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், அதிலிருந்து தமிழகத்தைக் காக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி வலியுறுத்தினார்.
இதுகுறித்து மாநிலங்களவை யில் நேற்று முன்தினம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த கனிமொழி பேசியதாவது:
நாட்டிலேயே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை இந்த அவைக்கு நான் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 17-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அளித்துள்ள பதிலில், “2015-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுதும் டெங்குவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2,012. தமிழகத்தில் மட்டும் டெங்குவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,049” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே தமிழ்நாடுதான் டெங்குவால் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை நாடு முழுதும் டெங்குவால் 6 பேர் உயிரிழந்திருக் கிறார்கள். அவர்களில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இது தொற்றுநோய் தாக்குதல் தமிழகத்தில் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பைவிட 300 மடங்கு அதிகம் என்று ‘ட்ராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜின்’ என்ற அமெரிக்க மருத்துவ இதழில் வெளிவந்துள்ள ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
டெங்கு போன்ற வெப்ப மண்டல தொற்றுநோய்கள் தாக்க திடக் குப்பைகளின் பெருக்கம் முக்கியக் காரணமாக அமைகிறது. விரைவான நகரமயமாதல் நடக்கும் நம் நாட்டில் இதுபோன்ற தொற்றுநோய்களை தடுக்கக் கூடிய செயல்திட்டங்களை நாம் கொண்டிருக்கவில்லை.
எனவே மத்திய சுகாதாரத் துறை இந்த விவகாரத்தில் தமிழக அரசோடு இணைந்து நோய்த் தடுப்புக்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறேன். மேலும் தமிழகம் முழுவதும் ரத்த வங்கிகளை அமைத்து டெங்குவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ‘பிளேட்லெட்’கள் கிடைக்க வழி செய்யவேண்டும். இதுதவிர டெங்கு நோய் பரிசோதனை செய்யும் கண்காணிப்பு மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.