

மேற்குவங்க மாநிலத்தில் 72 வயது கன்னியாஸ்திரியை, கொள்ளை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைக் கண்டித்து சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து சிஐடி விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தர விட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ளது கங்னாபூர். இங்கு கன்னியாஸ்திரிகள் நடத்தும் ஆங்கிலப் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு கொள்ளை கும்பல் ஒன்று, பள்ளிக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளது. அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை, 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளது. பள்ளியில் இருந்த ரூ.12 லட்சத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைப் போலீஸார் ரனாகட் மருத்துவமனையில் சேர்த் துள்ளனர்.
தகவல் காட்டுத் தீயாய் பரவியதும் பள்ளி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஏராள மானோர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் சீல்டா - ரனாகட் ரயில் பாதையில் மறியல் நடந்தது.
தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் பி.பி.சலீம், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘மிகக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ள கும்பலைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான தீவிர முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.
இதுகுறித்து நகர்ப்புற மேம் பாட்டுத் துறை அமைச்சர் பரீத் ஹகீம் கூறும்போது, ‘‘பலாத் கார சம்பவம் குறித்து சிஐடி விசாரணைக்கு முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார். இது மனித குலத்தின் மீது நடந்த தாக்குதல். மத சகிப்புத்தன்மை இல்லாதவர்களுடைய காட்டு மிராண்டித்தனம் இது’’ என்றார்.
இந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டார்ஜி, இதை மக்கள் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்கள். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.