

பிஹார் சிறைகளில் இருந்தபடி தங்களது மனைவியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்த கைதிகள் சிறை மாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து பாஜக புகார் செய்ததன் பேரில் பிஹார் மாவட்ட தேர்தல் அதிகாரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இருப்பவர் சையது சகாபுதீன் மற்றும் முன்னா சுக்லா. இவர்கள் இருவரும் கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர்.
சகாபுதீன், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் சிவான் தொகுதியின் முன்னாள் எம்பியாக இருந்தவர். தற்போது, சிவான் சிறையில் இருக்கும் இவர், மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாமல் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தனது மனைவி ஹின்னா சாஹிப்பை இரண்டாவது முறையாக போட்டியிட வைத்துள்ளார்.
முதல்முறை தோற்ற ஹின்னாவை, எப்படியும் இந்த முறை வெற்றிபெற வைப்பது என சிறையில் இருந்தபடி போனில் பிரச்சாரம் செய்து வந்தார் சகாபுதீன். இதுகுறித்து பாஜகவினர், சிறையில் இருந்தபடி தனது மனைவிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களை சகாபுதீன் மிரட்டுவதாக தேர்தல் கமிஷனிடம் புகார் கூறினர். இதனால், அவர் சிவானில் இருந்து கயா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐக்கிய தனதா தளத்தின் முன்னாள் எம்.எல்.ஏ.வான சுக்லாவின் மனைவி அன்னு சுக்லா, வைசாலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.வான அன்னு சுக்லாவிற்கு தனது கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, சுயேச்சையாக போட்டியிடுபவரை எப்படியும் ஜெயிக்க வைக்க வேண்டி, முன்னா சுக்லா, சிறையில் இருந்தபடி போனில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். இவரது மனைவியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை போனிலும் மிரட்டியுள்ளார். இவர் மீதும் பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் புகார் அளித்ததன் பேரில் முன்னா சுக்லா, பாகல்பூர் சிறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.
இந்த இருதொகுதிகளிலும் கடைசிகட்ட நாளான மே 12 அன்று தேர்தல் நடைபெறுகிறது.