

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத தலைவரான மஸ்ரத் ஆலம் விடுதலைக்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த மாநில அரசை நீக்க வேண்டும் எனவும் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக அவைத் தலைவர் டாக்டர்.பி.வேணுகோபால் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்த சில தினங்களில் பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவையில் விளக்கம் அளித்தார்கள். அரசின் பதில் திருப்தி அளிப்பதாக இல்லை. அம்மாநில அரசிடம் இருந்து எந்த மாதிரியான விளக்கங்கள் கோரப்பட்டன என அறிய விரும்புகிறோம்.
அதுமட்டுமன்றி பிரிவினைவாதி விடுதலையால் எழுந்துள்ள கொந்தளிப்பு பற்றி சிறிதும் கவலைப்படாமல் மேலும் 12 தீவிரவாதிகளை விடுதலை செய்யுமாறு மாநில காவல் துறை தலைவருக்கு முதல்வர் முப்தி முகமது சையது உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக யாரையும் கலந்தாலோசிக்கத் தேவை யில்லை என்றும் அவர் கூறியிருக் கிறார்.
பிரிவினைவாதிகளையும் தீவிரவாதிகளையும் விடுதலை செய்வது தேசவிரோத செயலாகும். நாட்டின் நலன்களுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் நடந்து கொள்கிறார்.
அம்மாநில அரசில் இருந்து பாரதிய ஜனதா வெளியேற வேண்டும். அங்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான வகையில் நடந்து கொண்ட ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதே பிரச்சினை குறித்து அதிமுகவின் சிறுபான்மை பிரிவின் தலைவரும் ராமநாதபுரம் தொகுதி எம்பியுமான அ.அன்வர்ராஜா மக்களவையில் பேசியபோது, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் முப்தி முகம்மது அரசை அகற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.