Published : 02 Mar 2015 08:59 AM
Last Updated : 02 Mar 2015 08:59 AM

மதமாற்ற தடை சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: விஎச்பி, ஆர்எஸ்எஸ் மீண்டும் வலியுறுத்தல்

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் பொன்விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியதாவது:

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும். இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உள்ளிட்டோர் ஆதரவளிக்க வேண்டும். மதமாற்றம் செய்வது தவறு எனும்போது, ஏற்கெனவே மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்துக்கு (இந்து) மாற்றுவதில் தவறு இல்லை.

இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் இந்துக்கள் காணா மல் போய்விடுவார்கள்.

தங்கள் நாட்டில் உள்ள இந்து கோயில் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாதவர்கள் (அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா) இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து பேசுகிறார்கள். இதுவிஷயத்தில் யாரும் நமக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 4-ல் ஆர்எஸ்எஸ் மாநாடு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்க மான அகில பாரதிய சஹா சேவா பிரமுக் அமைப்பின் சுஹஸ்ராவ் ஹிரேமத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொய்யான வாக்குறுதிகள் அல்லது கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்வதைத் தடுக்க மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. மக்கள் தாமாக முன்வந்து மதம் மாறுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.

சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இப்போதைய அரசும் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச் சினையை எழுப்பி உள்ளது. இது தொடர்பான நையோகி குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் சார்பில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் 3 நாள் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டை ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்த மயி தொடங்கி வைக்க உள்ளார். இதில் மோகன் பாகவத், தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைப்பு பெற்ற சுமார் 800 சமூக சேவை அமைப்பு கள் பங்கேற்க உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x