

* பட்ஜெட் நடைமுறை தொடங் குவதற்கு முன்பாக, எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்ற ஜேட்லி, அங்கிருந்த மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் ஆகியோரிடம் கைகுலுக்கிவிட்டு வந்தார். சோனியா காந்தியிடம் பேசும்போது அவருக்கும் முகமன் கூறினார்.
* ஜேட்லி அவைக்கு வந்த உடனே பாஜக மூத்த தலைவர் அத்வானி அவரைத் தட்டிக் கொடுத்தார்.
* நுண்ணியல் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் குறித்து ஜேட்லி குறிப்பிட்ட போது, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர் கள் அனைவரும் தொடர்ந்து மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
* பிரதமர் ஏற்கனவே கூறியபடி 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் வளர்ச்சியை நோக்கி தளராத பயணம் மேற்கொள்வோம் என்ற போதும் பிரதமர் மோடி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் எழுப்பினர்.
* யோகாவை அறக்கட்டளை நடவடிக்கைகளின் கீழ் கொண்டு வந்து, யோகா வகுப்புகளுக்கு சேவை வரி நீக்கப்படுவதாக ஜேட்லி அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்டதும் பிரதமர் மோடி அதிக உற்சாகத்துடன் புன்னகைபூத்தபடி மேஜையைத் தட்டி வரவேற்றார்.
* மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கிய ஜேட்லி இந்த அறிவிப்பு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மகிழ்ச்சியை வரவழைக்கும் என்றார். அதற்கு பதிலளிக்க கார்கே எழுந்தபோது, பாஜக உறுப்பினர்கள் சிலர் அவரை அமரும்படி குரல் எழுப்பினர். இதனால், அங்கு கூச்சல் நிலவியது.
* தொலைக்காட்சி கேமராக் கள் சில எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஜூம் செய்து பார்த்தபோது, அவர்கள் குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது தெரியவந்தது.
* விரைவான மாற்றத்துக்காக மக்கள் அதீத பெரும்பான்மை பெறும் வகையில் வாக்களித்தனர். முறைகேடு மற்றும் ஊழல் ராஜ்ஜியத்துக்கு அவர்கள் முடிவு கட்ட விரும்பினர் என்று ஜேட்லி கூரியபோது, எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது.
* அடல் ஓய்வூதியத் திட்டம், அடல் புத்தாக்கத் திட்டம் என இரு புதிய திட்டங்களுக்கு பாஜக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரைச் சூட்டி அறிவித்தார் ஜேட்லி.
* பட்ஜெட் உரையின்போது ஆளும்கட்சி இருக்கைகள் நிரம்பி வழிந்தன. எதிர்க்கட்சி வரிசையில் சில காலியிடங்கள் தென்பட்டன.
* பழைய கோவாவில் தேவாலயங்கள், கான்வென்டுகள், கர்நாடகத்தில் ஹம்பி, மும்பை எலிபெண்டா குகைகள் உள்ளிட்ட 9 பாரம்பரிய பகுதிகளை பாதுகாக்க திட்டங்களை அறிவித்த போது, பிஹார் மற்றும் தமிழக எம்.பி.க்கள் தங்கள் மாநிலத்துக்கும் அதுபோன்ற திட்டங்களை அறிவிக்கக் கோரி குரல் எழுப்பினர்.
* அவர் தனது உரையின்போது, உபநிஷத்திலிருந்து, ‘ ஓம் சர்வே பவந்து சுகின, சர்வே சந்து நிராமய, ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி’ (அனைவரும் மகிழ்ச்சியாகவும், நோய்களிலிருந்து விடுபட்டும், வேண்டிய பலன்கள் கிடைக்கப் பெற்றும், துன்பங்களால் பாதிக்கப் படாமலும் இருப்பார்களாக) என்ற ஸ்லோகத்தைக் குறிப்பிட்டார்.
பாதியில் உட்கார்ந்தார் நிதியமைச்சர்
புதுடெல்லி
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட் உரையை நின்று கொண்டு படித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உரையின் இடையே அமர்ந்துகொண்டு உரையைத் தொடர்ந்தார்.
62 வயதான ஜேட்லி அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவர் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கும்போது, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், "வேண்டுமானால், நீங்கள் அமர்ந்துகொண்டு படிக்கலாம்" என்று ஜேட்லியிடம் கூறினார்.
அதற்கு, "தேவைப்படும்போது நான் அமர்ந்துகொள்கிறேன்" என்றார். பின்னர் உரையைப் படிக்கத் தொடங்கிய அவர் சுமார் அரை மணி நேரம் கழித்து தனது இருக்கையில் அமர்ந்துகொண்டு படிக்கத் தொடங்கினார்.
முதுகுவலியால் கடந்த ஆண்ட பட்ஜெட்டின்போதும், உரையின் இடையே இடைவெளி எடுத்துக்கொண்டார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மக்களவை கூடியபோது அவர் மீண்டும் தனது உரையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.