

ரயில் பயணம் செய்பவர்கள் இனி நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று ரயில்வே துறை கூறியுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
ரயில் முன் பதிவை 60 நாட்கள் என்பதிலிருந்து 120 நாட்கள் என்று அதிகரித்திருப்பதன் மூலம் இடைத்தரகர்களின் மோசடியைக் குறைக்க முடியும் என்று அரசு கருதுகிறது.
எனவே பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் ரயில் பயணச்சீட்டு தொடர்பான மென்பொருளில் சில மாற்றங்கள் கொண்டு வரும் பணிகள் நிறைவடையும் என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இடைத்தரகர்களின் மோசடியைத் தவிர்ப்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அரசு கூறினாலும், இன்னொரு பக்கம், 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும்போது, அவற்றில் நிறைய பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு ரத்து செய்யப்படும்போது, அதன் மூலம் ரயில்வேக்கு அதிகளவு லாபம் கிடைக்கும் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இதனால் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதால், அது கைவிடப்பட்டது.
எனினும் வெளிநாட்டுப் பயணிகள் 360 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பயணச்சீட்டு இல்லாதவர்களுக்கு அவர்கள் ரயில் நிலையத்தில் நுழைந்தவுடன் ஐந்து நிமிடத்தில் சாதாரண டிக்கெட் வழங்கும் 'ஆபரேஷன் ஃபைவ் மினிட்ஸ்' எனும் திட்டத்தையும் ரயில்வே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தற்சமயம், ஸ்மார்ட்போன்கள் மூலம் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை வழங்கும் பரிசோதனை மத்திய, மேற்கு மற்றும் தென்னக ரயில்வேக்களின் புறநகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம் மற்ற எல்லா பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.