

உலக அரங்கில் இந்திய தேசத்தின் பலத்தை நிரூபணம் செய்வேன் என வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், "இந்திய தேசத்தின் பலத்தை உலக அரங்கில் நிரூபிக்கப்படும். அதற்கே நான் முன்னுரிமை அளிப்பேன். அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணப்படும். ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு பலப்படுத்தப்படும்.
பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறோம் என்பதை ஏற்கெனவே அவர்களிடம் எடுத்துரைத்து விட்டோம். சுமுக பேச்சுவார்த்தை தொடர வேண்டுமானால் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.
குண்டுவெடிப்புகள் போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் பேச்சுவார்த்தை முடங்கிவிடும் என பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் எடுத்துரைத்திருக்கிறார்" என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.