

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் நேற்று மதிய உணவில் தவளை கிடந்ததால் மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடப்பா மாவட்டம், இடுபுல பாயா பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி (ஐஐஐடி) உள்ளது. இங்கு மாணவர்களுக்கு நேற்று மதிய உணவு பரிமாறப்பட்டது. இதில் சாம்பாரில் தவளை இறந்து கிடந்ததை கண்டு மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கெனவே உணவில், பல்லி, கரப்பான்பூச்சி போன்றவை கிடந்ததாகவும், இதுகுறித்து புகார் செய்தும் கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
பின்னர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இடுபுலபாயா-கடப்பா நெடுஞ்சாலையில் மாணவ, மாணவிகள் சுமார் 400 பேர் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் போலீஸார் தலையிட்டு மாணவ, மாணவியரை சமாதானம் செய்தனர்.