

மேற்குவங்க மாநிலத்தில் 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகாட் பகுதியில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்துக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்" என்றார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
இந்த சம்பவத்துக்கு மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளன.
சிஐடி விசாரணை:
71 வயது கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சோசாவிடம் சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில், "ரனாகாட்டில் நடந்த கோர சம்பவம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.