Last Updated : 21 May, 2014 08:54 AM

 

Published : 21 May 2014 08:54 AM
Last Updated : 21 May 2014 08:54 AM

விழுந்து வணங்கினார்... விசும்பி அழுதார் மோடி!- நாடாளுமன்ற பாஜக கூட்டத்தில் உருக்கம்

பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் செவ்வாய்க் கிழமை உணர்ச்சிவசப்பட்டு பேசிய நரேந்திர மோடி கண் கலங்கினார். இக்கூட்டத்தில் அவர் பாஜக நாடாளுமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம், நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் இக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் புதிய எம்.பி.க்கள் 282 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதில், 63 வயது மோடியை பாஜக நாடாளுமன்ற கட்சித் தலைவராக, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி முன்மொழிந்தார். வெங்கய்ய நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, கரியா முண்டா, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட 10 பேர் வழிமொழிந்தனர்.

அத்வானி பேசுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது எனது கண்கள் கண்ணீரால் நிறைந்தன. அடுத்து அவசர சட்டம் முடிவுக்கு வந்த போதும், நரேந்திர மோடி என்னை வாழ்த்திய போதும் கண் கலங்கினேன். இது மகிழ்ச்சியில் பொங்கிய ஆனந்தக் கண்ணீர். இந்தமுறை மக்களவைத் தேர்தலின் பொறுப்புகளை ஏற்று பாஜகவுக்கு கருணை செய்திருக்கிறார் மோடி” என்றார்.

இதற்கு மோடி தனது ஏற்புரையில், “ஒரு மகன் தனது தாய்க்கு செய்யும் பணிவிடையை அவருக்கு செய்யும் கருணை எனக் கூறமுடியாது. தாய்க்கு பணிவிடை செய்யக் கடமைப்பட்டவர் மகன். எனவே எனது தாயான இந்தக் கட்சிக்கு நான் கருணை செய்ததாகக் கூறமுடியாது” என்று உணர்ச்சிவசப்பட்டவரின் குரல் தழுதழுத்தது.

கண்களில் முட்டி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் மோடி குனிந்துகொள்ள, அரங்கத்தில் அனைவரும் அமைதியாகிவிட்டனர். சில நொடிகள் நிசப்தத்திற்கு பின், தலைநிமிர்ந்த மோடி, குடிக்க தண்ணீர் கேட்டார். நீரை அருந்திய பின் தனது உரையை தொடர்ந்தார்.

பாஜக நாடாளுமன்ற கட்சித் தலைவராக தன்னை தேர்ந்தெடுத்தமைக்கு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, அத்வானிக்கு சிறப்பு நன்றிகளை கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் அவர் நினைவு கூரத் தவறவில்லை. “அடல்ஜியின் உடல்நலம் அனுமதித்து அவரும் இங்கு இருந்திருந்தால், இந்த சிறப்பான தருணம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்” என்றார்.

டெல்லி, குஜராத்பவனில் தங்கியிருக்கும் மோடி சரியாக 11.45 மணிக்கு நாடாளுமன்றம் கிளம்பினார். அங்கு வந்திறங்கிய மோடி, நாடாளுமன்ற வாசலில் முதல் அடியை எடுத்துவைக்கும் முன், முழங்காலிட்டு அதன் படிகளை தொட்டு வணங்கினார்.

மோடி குறித்து பாஜக எம்.பி.க்கள் ‘தி இந்து’விடம் கூறுகையில், “பஞ்சாயத்து தலைவர் பதவி கூட வகிக்காத மோடி, குஜராத்தின் முதல்வராக நேரடியாகப் பொறுப்பேற்றார். அதுபோல் நாடாளுமன்றத்திற்கும் இதுவரை வந்திராத மோடி, நேரடியாகப் பிரதமராகிறார்” என்றனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்து, பிரதமராகும் முதல் தலைவர்

நரேந்திர மோடி 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்து, பிரதமரான முதல் தலைவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

மிக இளம் வயதில் பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி 1944-ல் பிறந்தவர். அவர் பிரதமராக பதவியேற்கும் போது வயது 40.

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி உறுதி

மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடுவேன், ஐந்து ஆண்டுகள் நிறைவடையும்போது 2019-ல் எனது அரசு ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையை நாட்டுக்கு அளிப்பேன் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கத்தில் பாரதிய ஜனதா எம்பிக்கள் கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் மோடி ஆற்றிய ஏற்புரை வருமாறு:

பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை அளித்து இந்திய மக்கள் வாக்களித்திருக்கின்றனர். நான் அவர்களது விருப்பங்களை நிறைவேற்றத் தேவையான அனைத்தையும் செய்வேன். எளிமையான பின்னணியைக் கொண்ட நான் பிரதமராக பதவியேற்க இருப்பது இந்திய ஜனநாய கத்தை உருவாக்கிய நமது தலைவர்களின் பெருமையாகும்.

நமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தூய்மையான உணர்வுடன் எந்தப் பதவிக்கும் ஆசைப்படாமல் நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும். நாம் இன்று இந்திய ஜனநாயகக் கோயிலில் நிற்கிறோம். இந்த நேரத்தில் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் மிகவும் அவசியம்.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி என்னைப் பிரதமர் வேட்பாளராக கட்சி தேர்ந்தெடுத்தது. அன்று முதல் என்னுடைய பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற ஒவ்வொரு நிமிடமும் பாடுபட்டேன். மே 10-ம் தேதி பிரச்சாரம் முடிந்த பிறகு கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அறிக்கை அளித்தேன்.

அதுபோலவே 2019-ம் ஆண்டு எனது அரசு ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையை கட்சிக்கும் நாட்டுக்கும் அளிப்பேன்.

நமது நாட்டுக்குப் பெரும் வலிமை உள்ளது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்து வைத்தால் தேசம் 125 கோடி அடிகள் முன்னோக்கிச் செல்லும்.

மோடி உருக்கம்

முதல்முறையாக நான் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அடியெடுத்து வைத்தபோது, 2001-ம் ஆண்டு நான் முதல் முறையாக குஜராத் சட்டமன்றத்தையும் முதல்வர் அலுவலகத்தையும் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.

தேர்தல் முடிவு தொங்கு நாடாளுமன்றமாக அமைந்திருந்தால் மக்கள் முந்தைய ஆட்சிக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக அமைந்திருக்கும். ஆனால் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை அளித்து அவர்கள் தங்களது நம்பிக்கைக்கு வாக்களித்திருக்கின்றனர். அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற நான் முழுமையாகப் பாடுபடுவேன்.

இது சுயநம்பிக்கைக்கும் வலிமைக்குமான நேரமாகும். எனது அரசு ஏழைகளின் அரசு. அவர்களுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

ஏழைகள், இளைஞர்கள், தாய்மார்கள், நமது சகோதரிகளின் பாதுகாப்பு, கிராமப்புற மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள், உரிமை கள் மறுக்கப்பட்டவர்கள் ஆகியோ ருக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் எனது அரசு செயல்படும். நீங்கள் எனக்கு அளித்துள்ள பொறுப்பை நிறைவேற்ற என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன்.

எங்களுடைய பணிகளை நீங்கள் விமர்சிக்க வேண்டிய தேவையிருக்காது. முன்பிருந்த அரசுகளும் தலைவர்களும் நாட்டின் நலனுக்காக தங்கள் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அவர்கள் செய்த நன்மைகளை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.

இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x