

கேரளாவின் பரவலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தென் பகுதிகளில் மழையுடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்கு பல சாலைகள் துண்டிக்கப்பட்டது.
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கேரளா அருகே அரபிக் கடலுக்கு நகர்ந்தது. இதனால் கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கேரளாவின் தென் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல சாலைகள் ஸ்தம்பித்துள்ளன. வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் முடங்கியுள்ளனர்.
குமுளி- தேனி இடையேயான நெடுஞ்சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் சாலை ஓர சுவர் இடிந்து விழுந்ததில், நெடுசாலை மூடப்பட்டுள்ளது. நெய்யாறின் கரையிலும் பெரிய மரங்கள் மழையால் சாய்ந்துவிட்டது. திருவனந்தபுரத்தில் இதுவரை பெய்த மழைக்கு 245 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இடிக்கியுலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் ஒரு பெண் மின்னல் தாக்கி பலியானார்.
கோவளம் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் மீனவர்கள் பல நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழை கோவளம் மீனவர்களின் படகுகளை கடலுக்கு இழுத்துச் சென்றது.
குமிலி, கம்பம் ஆகிய இடங்கள் கடும் நிலச்சரிவால் மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.