

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால் மீது தான் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
ஆம் ஆத்மியின் தரப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ‘இந்தியாவின் ஊழல் அரசியல் வாதிகள்” என்ற தலைப்பிலான பட்டியலில் மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கட்கரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கோமதி மனோசா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், அமைச்சர் கட்கரியிடம் சுமார் இரண்டரை மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தினார். நாக்பூரில் உள்ள பூர்த்தி சாகர்கர்கானா நிறுவனத்துடன் உள்ள நெருக்கம் பற்றி கட்கரியிடம் கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கட்கரி, தான் தொழிலதிபர் இல்லை என்றும் கூட்டுறவு அமைப்புகளில் மட்டுமே தனக்கு தொடர்பு இருப்பதா கவும் தெரிவித்தார். விசாரணையின் போது கேஜ்ரிவால் தரப்பு மற்றும் கட்கரி தரப்பு வழக்கறிஞர்கள் இடையே காரசார வாதம் நடந்தது.
‘என்னிடம் கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்கலாம். அதற்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன். ஆனால் வழக்கில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக கேள்விகள் இருக்க வேண்டும்’ என்று மாஜிஸ்திரேட் கோமதி மனோசாவிடம் கட்கரி தெரிவித்தார். இருதரப்பு வழக்கறிஞர்கள் இடையே விவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் வழக்கறிஞர்களை மாஜிஸ்திரேட் கடுமையாகக் கடிந்து கொண்டார்.
விசாரணை முடிவில், சில ஆவணங்களை வழங்கும்படி கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் கேட்டனர். அதற்கு ஏப்ரல் 18-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கட்கரி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாமல் இருக்க முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது.