

கடந்த 2013-ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலுக்கு ஆபத்து ஏதுமில்லை என இக்கோயிலை ஆய்வுசெய்த சென்னை ஐஐடி நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் சிவன் கோயில், இந்துக்களின் புனித தலங்களில் ஒன்று. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் கோயிலைத் தவிர, அதைச் சுற்றியிருந்த அனைத்து கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இதில் சுமார் 5,700 பேர் இறந்திருக்கலாம் என மாநில அரசு மதிப்பிட்டது. பலமாத சீரமைப்பு பணிகளுக்குப் பிறகு கோயில் மீண்டும் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. என்றாலும் கோயிலை புனரமைக்கும் பணியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்துக்குப் பிறகு இக்கோயிலின் அஸ்திவாரம் மற்றும் சுவர்கள் எந்த நிலையில் உள்ளன என்று ஆய்வுசெய்யுமாறு சென்னை ஐஐடி நிபுணர்களிடம் ஏஎஸ்ஐ கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லியில் ஏஎஸ்ஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “கேதார்நாத் கோயிலுக்கு சென்னை ஐஐடி நிபுணர்கள் 3 முறை வந்து ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து இடைக்கால அறிக்கை அளித்துள்ளனர். இதில் கோயில் பாதுகாப்பாக உள்ளது, அதன் அஸ்திவாரம் சேதம் அடையவில்லை, கோயிலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். இறுதி அறிக்கையை அவர்கள் விரைவில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
கேதார்நாத் கோயில் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.