

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் சிறையிலி ருந்து விடுவிக்கப்பட்டதைக் கண் டித்துள்ள பாஜக, இது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சி (மஜக) கூட்டணிக் கட்சியான தங்களு டன் கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து மாநில பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பி னருமான ஜுகல் கிஷோர் சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
பிரிவினைவாத அமைப்பின் தலைவரான மஸ்ரத் ஆலமை விடுதலை செய்வதற்கு முன்பாக, கூட்டணிக் கட்சி என்ற முறையில் எங்களது அனுமதியைப் பெற் றிருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து மஜக எங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை. இதை சகித்துக்கொள்ள முடியாது. இது குறித்து விளக்கம் கேட்கப்படும்.
எங்களது ஆலோசனையைக் கேட்டிருந்தால் அதற்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம். இப்போதும் அவர்களது முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாட்டுக்கு எதிராக நஞ்சை கக்கும் ஆலம் போன்றவர்களை வெளியில் விட்டிருக்கக் கூடாது. இவர்களை நிபந்தனையின்றி வெளி யில் விட்டால் மீண்டும் பிரிவினை வாதத்தை வலியுறுத்தி முழக்க மிடுவார்கள்.
இந்த பிரச்சினை, கூட்டணி அரசை நடத்துவதற்கான அடிப்படையாக உள்ள குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் இடம்பெறவில்லை. எனவே, இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து பாஜக அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு எங்களது நிலைப்பாடு குறித்து மஜகவுக்கு தெரிவிக்கப்படும். யாரை யும் சார்ந்து பாஜக இல்லை. மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் மஜகவுடன் பாஜக கைகோர்த்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பாடு படுவோம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதுகுறித்து பேசி தீர்வு காண்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2010-ம் ஆண்டில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்தவர் ஆலம். அந்தக் கலவரத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். இதை யடுத்து ஆலம் கைது செய்யப் பட்டார். இவர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புப் பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜி வாலா கூறும்போது, “மஸ்ரத் ஆலம் விடுவிக்கப்பட்டதைக் கண்டிக்கி றோம். இது போன்ற நடவடிக்கை கள் அமைதியை சீர்குலைப்ப தாக உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்றார்.
விளக்கம் கேட்கிறது மத்திய அரசு
பிரிவினைவாத அமைப்பின் தலைவர் மஸ்ரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து அறிக்கை அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
குறைந்தபட்ச செயல்திட்டத்தின் ஒரு பகுதி: மஜக
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் கல்வி அமைச்சருமான நயீம் அக்தர் நேற்று கூறியதாவது:
மாநிலத்தில் இணக்கமான சூழலை ஏற்படுத்தவும் அமைதியை நிலைநாட்டவும் மாநிலத்தில் உள்ள அமைப்புகள், அண்டை நாடுகள் உட்பட அனைத்து தரப்பினரையும் பேச்சுவார்த்தையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறைந்தபட்ச செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படிதான் மஸ்ரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மஸ்ரத் போன்றவர்களை சிறையில் வைத்துக் கொண்டு அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சாத்தியமாகாது என்றார்.