

விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கியதன் மூலம் பாஜக தலைமையிலான கோவா மாநில அரசு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் துர்காதாஸ் காமத் கூறும்போது, “காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதியை கோவா அரசு விடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து நீக்கி உள்ளது.
இதன்மூலம் பாஜக அரசின் மறைமுக திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடக்கம்தான். வரும் காலத்தில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே வின் பிறந்த நாளை விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, “தேசத் தந்தையான காந்தியின் பிறந்த நாள் தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர வேண்டும். இந்த நாளை விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது. கடந்த ஆண்டும் காந்தி ஜெயந்தி நாளில் பள்ளிக்கு வருமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதுபோன்ற செயலை கைவிட வேண்டும்” என்றார்.
தவறுதலாக விடுபட்டது: முதல்வர்
இதுகுறித்து கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் கூறும்போது, “இந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் பட்டியலில் காந்தி ஜெயந்தி தவறுதலாக விடுபட்டுள்ளது. இதற்கு டைப்பிங் செய்யும்போது ஏற்பட்ட தவறே காரணம். வேண்டும் என்றே செய்த தவறு அல்ல” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறும்போது, “இந்த சம்பவம் பாஜகவின் மோசமான மன நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. வேறு எந்த மாநில அரசாவது இதுபோன்ற நடவடிக் கையை எடுக்குமா? இதுபோன்ற முடிவு தேச விரோதமானது. நாட்டில் உள்ள எந்த அரசுக்கும் காந்தி ஜெயந்தியை விடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை” என்றார்.