கிரிக்கெட் வாரியத்தின் 3 பேர் பட்டியல் நிராகரிப்பு: முத்கல் கமிட்டி விசாரிக்க உத்தரவு

கிரிக்கெட் வாரியத்தின் 3 பேர் பட்டியல் நிராகரிப்பு: முத்கல் கமிட்டி விசாரிக்க உத்தரவு
Updated on
1 min read

கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த, கிரிக்கெட் வாரியம் அளித்த 3 பேர் பட்டியலை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் இதுகுறித்து ஏற்கெனவே விசாரணை நடத்திய நீதிபதி முத்கல் கமிட்டியே மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், இப்ராஹிம் கலிஃபுல்லா அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சூதாட்டம் குறித்து ஏற்கெனவே விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசன் மற்றும் 12 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தது.

இதுகுறித்து விசாரிக்க இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.என்.படேல், சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் ஆகியோர் கொண்ட பட்டியலை கிரிக்கெட் வாரியம் அளித்திருந்தது.

இந்தப் பட்டியலை நிராகரித்த நீதிபதிகள், ஏற்கெனவே இதுகுறித்து விசாரித்த முத்கல் கமிட்டியே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர். விசாரணைக்கு தேவையான உதவிகளை கோரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முத்கல் கமிட்டியிடம் சீனிவாசன், கேப்டன் தோனி, ஐபிஎல் முதன்மை நிர்வாகி சுந்தரராமன் ஆகியோர் அளித்த சாட்சியங்களின் ஒலிநாடா பதிவை கேட்பதற்கு சீனிவாசன் தரப்பிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர். சீனிவாசன் தரப்பில் அவரது வழக்கறிஞர் அமித் சிபல், வாரியம் தரப்பில் வழக்கறிஞர் ரோஹினி மூசா ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற செயலாளர் முன்னிலையில் ஒலிநாடா பதிவை கேட்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி வழங்கினர். சாட்சியம் குறித்த விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in