Last Updated : 10 Mar, 2015 07:21 PM

 

Published : 10 Mar 2015 07:21 PM
Last Updated : 10 Mar 2015 07:21 PM

உள்ளாட்சி அமைப்புகள் மீது தணிக்கை தேவை: சிஏஜி

அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளின் மீது சமூகத் தணிக்கை தேவை என்று மத்திய தலைமை தணிக்கைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய தலைமை தணிக்கைக்குழு அதிகாரி சசிகாந்த் ஷர்மா கூறும்போது, “உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசிடமிருந்து அதிகரித்து வரும் நிதிக்கும், பொறுப்புகளுக்கும் ஏற்ப உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்பேற்கும் தன்மையும் இல்லை. இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் சமூகத் தணிக்கை உதவும்.

சமூக-பொருளாதார வளர்ச்சியை நேரடியாக தாக்கம் செலுத்தும் மத்திய, மற்றும் மாநில அரசுகளின் செலவினங்கள் 2013-14 நிதியாண்டில் ரூ.17 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சராசரியாக தலா ரூ.2,656 கோடி ‘வளர்ச்சிக்கான செலவினம்’ என்று உள்ளிடப்படுகிறது.

இந்த பெரும் தொகைகள் உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகள் மூலமே இந்தச் செலவினங்களில் பெரும் பகுதி செலவிடப்படுகிறது.

இந்நிலையில் சமூகத் தணிக்கையாளர்களான என்.ஜி.ஓ.க்கள் போன்றோர் அரசுத் திட்டங்களை செயல்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளை சமூக தணிக்கை செய்ய வேண்டும். இது மரபான நிதித் தணிக்கையையும் தாண்டிச் செல்லக்கூடியது. இதன் மூலம் விழிப்புணர்வு, புகார்கள் மற்றும் திட்டத்தின் மீதான எதிர்வினைகள் ஆகியவற்றை பெற்று கவனம் செலுத்த முடியும்.

இது ஒரு செயல்திறன் தணிக்கை போன்றதே.” என்று கூறினார்.

14-வது நிதி ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியுள்ளதையடுத்து சிஏஜி இவ்வாறு பொறுப்பான ஒரு முறையை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2 லட்சம் கோடி தொகை பஞ்சாயத்துகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 2.6 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிதி எப்படி செலவிடப்படுகின்றன? அரசு திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைகிறதா போன்ற விவகாரங்கள் சமூக தணிக்கை மூலம் தெரியவரும் என்கிறார் சிஏஜி.

எனவே மாநில அரசுகள் இது குறித்து நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சமூகத் தணிக்கை முறை நிச்சயம் மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்கிறார் ஷர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x